இம்பால்
இன்று மணிப்பூரில் வன்முறைகளுக்கு இடையே நாகா பழங்குடியினர் பேரணி நடத்த உள்ளனர்.
கடந்த மே மாதம் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே பெரிய அளவில் கலவரம் வெடித்தது. சுமார் 3 மாதங்களைக் கடந்தும் இன்னும் அந்த கலவரம் முடிவுக்கு வரவில்லை.
மணிப்பூர் மாநிலம் முழுவதும் காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ள போதிலும் வன்முறை சம்பங்கள் தொடர்ந்து வருகின்றன. மெய்தி மற்றும் குகி மக்களுக்கு இடையே நடந்து வரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர இருதரப்புடனும் மத்திய அரசு அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென நாகா பழங்குடியின அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
அமைதி பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக மணிப்பூரில் நாகா பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்று பிரமாண்ட பேரணி நடத்தவுள்ளதாக நாகா அமைப்பான ஐக்கிய நாகா குழு அறிவித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமெங்லாங், சேனாபதி, உக்ருல் மற்றும் சந்தேல் மாவட்டங்களின் மாவட்ட தலைநகரங்களில் புதன்கிழமை காலை 10 மணி முதல் பேரணிகள் நடைபெறும். இதில் நாகா மக்கள் அதிக அளவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
மணிப்பூரில் வன்முறைகளுக்கு மத்தியில் நாகா பழங்குடிகளின் பேரணி நடைபெற இருப்பதால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.