டெல்லி: நாடாளுமன்றத்தில், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. இரு நாட்கள் நடைபெறும் விவாதங்களைத் தொடர்ந்து 10ந்தேதி பிரதமர் பதிலுரை ஆற்றுகிறார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி நாடாளுமன்ற அவையில் பதில் அளிக்க மறுப்பதால், அவரை நாடாளுமன்றத்தில் பேச வைக்க, எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஐஎன்டிஐஏ (I.N.D.I.A.) கூட்டணி கட்சிகள் சார்பில், காங்கிரஸ் கட்சி பாஜக கூட்டணி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று முதல், 2 நாட்களுக்கு தொடர் விவாதம் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து அவைகளை முடக்கி வருகின்றனர். இருந்தாலும் அமளிகளுக்கு இடையே டெல்லி மசோதா உள்படபல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டனர். இதனை தொடர்ந்து இதற்கான நோட்டீஸ் எதிர்க்கட்சிகள் தரப்பில் வழங்கப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதங்கள் பற்றி சபாநாயகர் அறிவிக்காமல் இருப்பதை எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று முதல் 10 ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பதால் அனைத்து விவாதங்களுக்கும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி பேசுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இரு அவைகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு மெஜாரிட்டி உள்ளதால், ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.