டில்லி
நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டில்லி நிர்வாக மசோதா நிறைவேறியது.
டில்லி அரசின் உயர் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்துக்குச் சிபாரிசு செய்ய ஒரு ஆணையம் அமைக்கவும், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு இறுதி அதிகாரம் அளிக்கவும் வகை செய்யும் மசோதா ஒன்றை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. கடந்த வாரம் இந்த டில்லி நிர்வாக மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
நேற்று பிற்பகல் மாநிலங்களவையில் பலத்த அமளிக்கிடையே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தாக்கல் செய்தார். மசோதா மீது காரசார விவாதம் நடந்தது. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். அபிஷேக்சிங்வி, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் டில்லி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றும், கூட்டாட்சி முறையை மீறுவதாகவும் குற்றம் சாட்டினார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர். சுதன்சு திரிவேதி மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆம் ஆத்மி அரசு அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடுகள் செய்ததால், மசோதா கொண்டுவர வேண்டியதாகி விட்டது என்று அவர் கூறினார். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த மசோதா அரசியல் சட்டப்படி, செல்லுபடியாகக்கூடியது எனப் பேசினார்.
இந்த மசோதா மீது நடந்த காரசாரமான விவாதம் இரவு வரை நீடித்தது. விவாதம் நிறைவடைந்த பின் இரவில் மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதில் மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிர்த்து 102 வாக்குகளும் பதிவாகி இருந்ததால் மசோதா நிறைவேறியது.