புதுடெல்லி:
மணிப்பூர் கலவரம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள, ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் மே மாதம் முதல் நடைபெற்று வரும் வன்முறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி, மணிப்பூரில் உள்ள சூழ்நிலையை அரசு மிகவும் முதிர்ச்சியுடன் கையாண்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து, மணிப்பூரில் மறுகுடியமர்த்தும் பணிகளை கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மூன்று முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவில் நீதிபதி கீதா மிட்டல் தலைமை தாங்க, நீதிபதி ஷாலினி ஜோஷி மற்றும் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோரும் இடம் பெறுவார்கள். இந்த குழுவானது மணிப்பூர் வன்முறை தொடர்பான விசாரணை, நிவாரணம், நிவாரண நடவடிக்கைகள், இழப்பீடு மற்றும் மறுவாழ்வு போன்ற உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் செய்யப்படுவதை கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
”மணிப்பூர் பாலியல் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ குழுவில் வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற வேண்டும். சட்டத்தின் மீது நம்பிக்கையை உறுதிப்படுத்த, குறைந்தபட்சம் துணை எஸ்பி பதவியில் உள்ள ஐந்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். இவர்களுக்கு கூடுதல் அதிகாரம் எதுவும் வழங்கப்படாது. இந்த அதிகாரிகள் சிபிஐயின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகக் கட்டமைப்பின் உட்பட்டே செயல்படுவார்கள்” எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.