சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்றுகாலை நடைபெற்ற கருணாநிதி நினைவுநாள் பேரணியில் கலந்துகொண்டு நடந்து சென்ற திமுக மாமன்ற உறுப்பினர், திடீரென மயங்கி கீழே விழுந்து பலியானார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 5வது நினைவு தினம் இன்று திமுகவினரால் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றருது. இந்த பேரணியில் பங்கேற்ற சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், 146வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சண்முகம் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
முன்னதாக சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து பேரணியை தொடங்கினார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த பேரணியில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மஸ்தான், தங்கம் தென்னரசு, சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி உட்பட திமுக அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
இந்த பேரணியில் பங்கேற்ற திமுகவின் செயற்குழு உறுப்பினரும், 146 வார்டு மாமன்ற உறுப்பினருமான சண்முகம் பேரணி தொடங்கி சிறிது நேரத்தில் மயங்கி சரிந்துள்ளார். அவருடன் வந்தவர்கள் அவரை தண்ணீர் தெளித்து எழுப்பிய நிலையில், அவர் எழும்பாததால் ஆம்புலன்ஸ் மூலமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.