சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி பகுதியில், அதானியின் துறைமுகம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக செப்டம்பர் 5ந்தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காட்டுப்பள்ளியில் 330 ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் துறைமுகயம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தை அதாவது, கடந்த 2012ம் ஆண்டிலிருந்து எல்&டி நிறுவனம் இயக்கி வந்தது. பின்னர் அது அதானி கைக்கு மாறியது. தற்போது தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல விரிவாக்க பணிகளை தொடங்கப்பட திட்டமிப்பட்டுள்ளது. தற்போது, 330 ஏக்கரில் உள்ள அதானி துறைமுகம் 6,111 ஏக்கராக விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 15000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என நம்பப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டுவாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி பகுதியில் தனியார் துறைமுக விரிவாக்கப்பணிக்காக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் செப்டம்பர் 5ந்தேதி நடைபெறும் என பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டப்படுள்ளது. இதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அன்று எதிர்ப்பு .. இன்று ஆதரவு ? என முதல்வர் ஸ்டாலினுக்கு பூவுலகின் நண்பர்கள் ஜி சுந்தர்ராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். அத்துடன் கருத்துக்கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் சுந்தர்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “82 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்து – 35 இலட்சம் மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்படுத்தும் அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்தை அதிமுக – பாஜக அரசுகள் அனுமதிக்கக்கூடாது.” 2021ல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி இது.
ஆனால், இன்று அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
சென்னைக்கு அருகாமையில் காட்டுப்பள்ளியில் L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் ஜனவரி 30 2013ல் செயல்பாட்டைத் துவக்கியது. அதானி குழுமம் கடந்த 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியது. M/s MARINE INFRASTRUCTURE DEVELOPER PRIVATE LIMITED எனும் பெயரில் இத்துறைமுகத்தை அதானியின் Adani Ports and Special Economic Zone Limited நிறுவனம் நடத்தி வருகிறது.
330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த துறைமுகத்தை 6100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுச்சூழல் அனுமதிகோரி அதானி குழுமம் 2018ஆம் ஆண்டு விண்ணப்பித்தது. இத்திட்டத்திற்கு தேவையான 6110 ஏக்கர் நிலப்பரப்பில், 2291 ஏக்கர் மக்கள் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்கள் , 1515 ஏக்கர் TIDCO மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தனியார் நிலம் . இவற்றை கையகப்படுத்தப்போகும் நிலையில் ஏற்கனவே துறைமுகம் அமைந்துள்ள 337 ஏக்கர் போக, சுமார் 6 கிமீ வரையிலான கடல் பகுதிகளில் மணலை கொட்டி சுமார் 1967 ஏக்கர் கடல் பரப்பையும் ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளனர்.
இத்திட்டத்திற்காக, நில மீட்பு (Sea Reclamation) என்ற பெயரில் கருங்காளி சேறு, ஆலமரம் சேறு, லாக்கு சேறு, காளாஞ்சி சேறு, கோட சேறு போன்ற கரைக்கடல் சேற்றுப் பகுதிகளில் சுமார் 6கிமீ நீளத்திற்கு 2000 ஏக்கர் பரப்பளவிற்கு மணல் கொட்டப்படும். கடல் பகுதியை மணல்கொட்டி நிரப்பி அதை அதன் இயல்பிலிருந்து மாற்றுவது என்பது திரும்ப சரிசெய்ய முடியாத மிகப்பெரிய சூழலியல் பாதிப்புகளை உண்டாக்கும்.
அதானி குழுமன் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு(Environmental Impact Assesment) மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம்(Environemntal Management Plan) தயாரிப்பதற்கான ஆய்வு எல்லைகளை(Terms of Reference) 15.10.2019 அன்று ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் வழங்கியது.
இந்த ஆய்வு எல்லையின் கால அவகாசம் 4 ஆண்டுகளாகும். AD குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் ஆகியவற்றை பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அப்போதைய அ.தி.மு.க. அரசால் 22.01.2021 அன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அப்போதைய எதிர்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட பல சுற்றுச்சூழல், மீனவர் அமைப்புகள் இத்திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி தொடர் பிரச்சாரங்களை முன்னெடுத்தன. இந்த எதிர்ப்பின் தீவிரத்தை உணர்ந்த அ.தி.மு.க. அரசு 22.01.2021 அன்று நடைபெற இருந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஒத்திவைத்தது.
அதானி குழுமம் தற்போது15.10.2023ஆம் தேதிக்குள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இத்தேதிக்குள் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தி திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்தை ஒன்றிய அரசிடன் அதானி நிறுவனம் சமர்ப்பிக்காவிட்டால் மீண்டும் தொடக்கத்திலிருந்து அடிப்படை ஆய்வுகளைச் செய்து சுற்றுச்சூழல் அனுமதிகோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். இதனைத் தவிர்ப்பதற்குதான் செப்டம்பர் 5ஆம் தேதியன்று பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தி திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்தை 15.10.2023க்குள் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்க அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
13.01.2021 அன்று இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர், இப்போதைய தமிழ் நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அதானியின் துறைமுக விரிவாக்கத்தைக் கடுமையாக எதிர்த்தார். ” 82 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்து – 35 இலட்சம் மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்படுத்தும் அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்தை அதிமுக – பாஜக அரசுகள் அனுமதிக்கக்கூடாது.
அதானி குழுமத்திற்காகத் தமிழகத்தின் பொருளாதார நலனையும் – சுற்றுப்புறச் சூழலியல் பாதுகாப்பையும் அ.தி.மு.க. அரசும் – மத்திய பா.ஜ.க. அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு தாரைவார்ப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டம் எவ்விதத்திலும் மக்களுக்கோ – சுற்றுப்புற சூழலியலுக்கோ நண்பன் இல்லை; மாறாகப் பரம விரோதியாகவே இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டம் அமைந்திருக்கிறது என்பதை அ.தி.மு.க. அரசோ – அதானிக்காக வரிந்து கட்டிக் கொண்டு தமிழக மற்றும் ஆந்திர மீனவர்களை வஞ்சிக்க நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசோ யோசித்துக் கூடப் பார்க்காமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அதே ஆண்டு தேர்தலைச் சந்தித்த தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் ” தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அதானி துறைமுகத்துக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது” எனக் கூறியது. இந்த நிலையில் அதானி நிறுவனம் விரைவாக இத்திட்டத்தை துவக்குவதற்கு ஏற்ற வகையில் செப்டம்பர் 5ஆம் தேதி பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த அறிவிப்பு வெளியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எல்லா திட்டங்களையும் காலநிலை மாற்றம் எனும் கண்ணாடியைக் கொண்டே அணுகும் என்று அறிவித்த முதலமைச்சர் தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்கக் கூடாது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திக் கொடுத்துவிட்டால் ஒன்றிய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதியோ, தேசிய காட்டுயிர் வாரிய அனுமதியோ பெறுவது அதானி நிறுவனத்திற்கு மிகவும் எளிய காரியமாகி விடும். அப்படி நிகழ்ந்தால் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவர்நீர் ஏரி அழிந்துபோகும். அந்த ஏரியையும் திட்டம் அமையவுள்ள கடற்பகுதியையும் நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எல்லாவற்றுக்கும் மேலாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 35 லட்சம் மக்களை வெள்ள அபாயம் சூழும். இதுமட்டுமின்றி அண்மையில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்று திரும்பிய வுடன் வெள்ளை மாளிகை வெளியிட்ட ஆவணத்தில் “அமெரிக்க ராணுவம் காட்டுப்பள்ளியில் உள்ள L&T துறைமுகத்துடன் மேற்கொண்டுள்ள MSRA ஒப்பந்தம் பல அரங்குகளிலும் அமெரிக்கா மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளுக்கான செலவு குறைந்த மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் நிலையான செயல்பாடுகளை எளிதாக்குகிறது” எனக் கூறியிருந்தது.
ஏற்கெனவே காட்டுப்பள்ளிக்கு இதுவரை மூன்று அமெரிக்க ராணுவ கப்பல்கள் வந்து சென்றுள்ளன. இந்த நிலையில் அதானியின் துறைமுக விரிவாக்கம் தமிழ் நாட்டிற்கு பன்னாட்டு அளவில் ஆபத்தையே விளைவிக்கும். இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அறிவிப்பைத் திரும்பப்பெற தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் எனக் கோருகிறோம்.
இதே கோரிக்கையை தமிழ் நாட்டின் அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங்களும் முன்வைக்க வேண்டும் எனவும் கோருகிறோம்.” இவ்வாறு பூவுலகின் நண்பர்கள் அறிக்கையில் கூறியுள்ளார்கள்.