சென்னை: ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி, தமிழ்நாடு முழுவதும் அன்று ஒரே நாளில் சுமார் 100 கோடி ரூபாயை பத்திரப் பதிவு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புது மழைப் பொழிந்து ஆற்றில் வெள்ளம் பெருகும் காலம் ஆடி. இதில் 18-ம் நாள் மிக மிக விசேஷமானது. ஆடி பட்டம் தேடி விதை என்பதை போற்றும் வகையில், அன்றைய தினம் விவசாயிகள் பயிர்களை விதைப்பார்கள். மேலும், இந்நன்நாளில், புதியதாக இடங்கள் வாங்குவது, தங்கம் வாங்குவதுடன் நிலம், வீடு வாங்கி பதிவு செய்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
தேமலும் புனித நதி தீரங்களில் புனித நீராடுவது, புதுமணப் தம்பதிகள் வளையல், காதோலை, கருகமணி, தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், மஞ்சள் தடவிய நூல் ஆகியவற்றை நதிக்கரையில் பூஜை செய்து பின் காவிரியில் விடுவதை தமிழர்கள் காலம், காலமாக கடை பிடித்து வருகிறார்கள். என பல சம்பிரதாயங்களை முன்னோர்கள் நடைமுறைப்படுத்தி உள்ளனர். இதை இன்றளவும் தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஸ்ரீரங்கநாதர் காவிரி அம்மனுக்கு சீதனம் கொடுக்கும் வழக்கமும் உள்ளது. காவிரியில் நீராடிவிட்டு தாமரை இலையில் விளக்கேற்றி நீரில் மிதக்க விட்டு அன்னையைப் பூஜித்து தான தர்மங்களைச் செய்தால் பதினெட்டு சித்தர்களின் ஆசியையும் பெறலாம். என்பது நம்பிக்கை.
ஆடி 18ம்நாளான ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பதிவுத்துறையில் ஏராளமான பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால், தமிழ்நாடு அரசு, பதிவுக்கான டோக்கன்களை இரு மடங்காக வழங்க அறிவுறுத்தியதுடன், பதிவுத்துறை ஊழியர்கள் கூடுதல் பணி நேரம் பணியாற்றி, அனைத்து பதிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அன்றைய ஒரே நாளில் மட்டும் ரூ.100 கோடி அளவில் வருமானத்தை பதிவுத்துறை ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இருதுதொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி, சாா் பதிவாளர் அலுவலகங்களில் அதிக அளவு பதிவுகள் நடைபெறுவது வழக்கம். இதைக் கருத்தில் கொண்டு, ஆடிப்பெருக்கு தினமான வியாழக்கிழமை (ஆக.3) டோக்கன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன. அதன்படி, ஒவ்வொரு சாா் பதிவாளா் அலுவலகத்திலும் 100 டோக்கன்களுடன் கூடுதலாக 50 டோக்கன்களை சொத்து வாங்குவோா் பெற்றனா். இதனால், ஆவணம் பதிவு செய்ய விரும்பிய அனைவரும் டோக்கன்களை எந்தவித சிரமுமின்றி பெற்றனா். மேலும், பதிவுத் துறை ஆடிப் பெருக்கு தினத்தில் மட்டும் ரூ.100 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.