புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என புதுச்சேரி சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இது வரவேற்பை பெற்றுள்ளது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்ற கோரிக்கை அனைத்துக் கட்சிகளாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. பலமுறை இதுதொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டும், இதுவரை எந்தவொரு ஆளுநரும் ஒப்புதல் வழங்கியது இல்லை.
இந்த நிலையில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் புதுச்சேரிக்கு, மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கொண்டு வந்த அரசு தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதன்மீது அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் தங்களது கருத்தை பதிவு செய்தனர். தொடர்ந்து தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றி துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தீர்மானம் மற்றும் அது சம்பந்தமான கோப்புகளுக்கு புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆளுநர் மாளிகை தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான கோப்பு, 4 மாதம் தாமதமாக ஜூலை 22 ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகைக்கு வந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாக கொண்டு வரப்பட்ட மாநில தகுதிக்கான தீர்மானத்தை துணைநிலை ஆளுநர் 3 மாத காலம் கிடப்பில் போட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான கோப்பு கடந்த ஜூலை 22 ஆம் தேதி சனிக்கிழமை அன்று துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வந்தது. விடுமுறை நாளான சனிக்கிழமையில் கோப்பு பெறப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி அன்றே துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.