புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோயில்
சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. புதுப்பாக்கம் வீர அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால், தடைபட்ட காரியம் நடந்தேறும். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். எடுத்த காரியம் யாவும் வெற்றியைத் தரும் என்பது ஐதீகம்.
சீதாதேவியை மீட்பதற்காக ராம & ராவண யுத்தம் நடந்து கொண்டிருந்தது.
யுத்தத்தின் போது மாயப் போரில் வல்லவனான ராவணனின் மைந்தன் இந்திரஜித், பலம் பொருந்திய பாணம் ஒன்றை விட்டான். அந்த மூர்க்கத்தனமான பாணத்திற்கு, லட்சுமணன் மற்றும் வானரப் படை வீரர்கள் பலர் மூர்ச்சையாகிப் போனார்கள். அவர்களுக்கு மீண்டும் சுயநினைவு வர சஞ்ஜீவி மலையில் உள்ள அமிர்த சஞ்ஜீவினி மூலிகை தேவைப்பட்டது.
காற்றை விட வேகமாகச் செல்ல, வாயுவின் புத்திரனைத் தவிர வேறு யாரால் முடியும்? எனவே அவரையே மூலிகையை கொண்டு வரும்படி ஜாம்பவான் பணித்தார். ராமபிரானின் ஆசியுடன் மூலிகையை தேடிப் புறப்பட்ட அனுமன், மூலிகையை அடையாளம் காண முடியாமல், மூலிகை இருப்பதாக கூறப்பட்ட சஞ்ஜீவி மலையையே பெயர்த்தெடுத்து தூக்கியபடி பறந்தார்.
அப்படி வரும்போது, மாலை வேளையாகிவிட… இருள் சூழத் துவங்கியது. அதனால் நித்திய கர்மாவாகிய அனுமன், சந்தியா வந்தனம் செய்வதற்காக ஓரிடத்தில் இறங்கினார். தன் வழிபாடு முடிந்ததும் ஆஞ்சநேயர் புறப்பட்டுச் சென்றார். முசுகுந்தச் சக்கரவர்த்திக்காக, மகான் வியாச ராஜ தீர்த்தர் ஆஞ்சநேயர் பாதம்பட்ட மலை உச்சியில் அனுமனின் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார். இந்த மலை ஆஞ்சநேயப் பெருமானுக்கு, திருமங்கை ஆழ்வார் கோயில் கட்டியதாக கூறப்படுகிறது. பின்னாளில் செங்கல்வராய மகாராஜா மற்றும் பல்லவ மன்னர்களால் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன என்று தல வரலாறு கூறுகிறது.
108 திவ்ய தேசங்களில் திருவிடந்தையில் உள்ள நித்திய கல்யாண பெருமாள் கோவிலும் ஒன்று. அக்கோவிலின் ‘பரிவேட்டை’ தலமாக விளங்குகிறது புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோவில். இங்கு வரும் பக்தர்களுக்கு வலம்புரி சங்கு கொண்டு புனித தீர்த்தம் வழங்கப்படுகிறது. வேறு எந்த அனுமார் கோவிலும் இந்த வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்பாக்கத்தில் அமைந்துள்ள கஜகிரி என்னும் மலையில் வீற்றிருக்கும் அனுமார் சாலகிராம கல்லால் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மூலவர் வடக்கு நோக்கி 6 அடி உயரத்தில் காட்சி தருகிறார். இக்கோவிலில் 108 படிக்கட்டுகள் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக கருதப்படுகிறது. இம்மலையில் இன்றும் ஆஞ்சநேயர் பௌர்ணமி தோறும் இரவில் கிரிவலம் வந்து கொண்டிருப்பதாக அங்கிருக்கும் மக்களால் நம்பப்பட்டு வருகிறது. ஆகவே இம்மலையில் பக்தர்கள் கிரிவலம் சென்றால் நினைத்தது அப்படியே நடக்கும் என்று கூறப்படுகிறது.
கோவில் பரிகாரங்கள்:
1. அமாவாசையில் புது செங்கல் ஒன்றை வாங்கி அதில் பகவான் ஸ்ரீ ராமரின் நாமத்தை எழுதி தலையில் வைத்து கொண்டு 108 படிகள் ஏறி கிரிவலம் வந்தால் கட்டாயம் வீடு வாங்கும் பாக்கியம் சீக்கிரம் கிடைக்க பெறும் என்பது ஐதீகம்.
2. அருகம்புல் மற்றும் வெற்றிலை மாலை சூட்டி, வெண்ணை சாற்றி தரிசனம் செய்தால் நினைத்த வேலை நினைத்தபடி அமையும். தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் எந்த பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும்.
3. பிரதி மாதம் மூல நட்சத்திரம் வரும் நாளில் வெற்றிலை மற்றும் வடை மாலை சாற்றி தரிசனம் செய்து வழிபட்டு வந்தால் காரியத்தடை, திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.