டில்லி

ராகுல் காந்தியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த புர்னேஷ் கோடி உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறி உள்ளார்.

கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘மோடி’ என்ற சமூகத்தின் பெயர் குறித்து அவதூறான கருத்தைத் தெரிவித்ததாகக் கூறி, பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  எனவே ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதைக் குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். இதனால்  ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர்.பி. பதவியைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்ந்த புர்னேஷ் மோடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். ஆனால் தொடர்ந்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் எங்கள் சட்டப் போராட்டத்தை நடத்துவோம்” என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் புர்னேஷ் மோடி மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.