டெல்லி: எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ஐஎன்டிஐஏ எனப்படும் ( ‘I.N.D.I.A. இந்தியா’) இந்தியா என்ற பெயருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பொருட்டு, காங்கிரஸ், திமுக உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட முதல் கூட்டம் பிகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ஜூலை 17, 18ந்தேதிகளில் நடைபெறுகிறது. இதில் 26 கட்சிகள் சார்பில் கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ஐஎன்டிஐஏ (Indian National Developmental Inclusive Alliance) அதாவது, இந்தியா(INDIA) என பெயர் வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி பெயரை பயன்படுத்த தடைவிதிக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மனு தொடர்பாக பதில் அளிக்க, மத்திய அரசு மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.