புதுக்கோட்டை: சிறையில் இருக்க வேண்டிய ரகுபதி, சிறைத்துறை அமைச்சராக இருப்பது வேதனை அளிக்கிறது என என் மண் என் மக்கள் நடைபயணத்தின்போது, புதுக்கோட்டையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். அதுபோல அறந்தாங்கியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அப்பா — மகனான ஸ்டாலினும், உதயநிதியும் எம்.எல்.ஏ.,வாக, அமைச்சர்களாக இருந்தும் எந்த பயனும் இல்லை. அதேபோலத் தான், திருநாவுக்கரசும் ராமச்சந்திரனும் என்றவர், ஊருக்கு பத்து சாராய கடை திறக்க தெரிந்த உங்களுக்கு, கூடுதல் பஸ் விடத் தெரியாதா? என கேள்வி எழுப்பினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 28ம் தேதி முதல் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். ஏழாவது நாளாக நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதியில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். அரிமளம் விளக்கு சாலையில் இருந்து நடை பயணமாக வந்த அண்ணாமலைக்கு பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியம் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதைத்தொடர்ந்து, சந்தைப்பேட்டை, வடகாடுமுக்கம், அரசமரம், காமராஜர் சிலை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட சாலைகளின் வழியாக சென்று இறுதியில் காமராஜர் சிலை அருகே பேசினார்.
அப்போது, திமுக அரசை கடுமையாக சாடியவர், கமிஷன், கலெக்சன், கரப்ஷன் இதுதான் தமிழகத்தில் திமுக ஆட்சியின் முகவரியாக உள்ளது. காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. பல அமைச்சர்கள் மீது ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகள் உள்ளன. தற்போது சிறைத்துறை அமைச்சராக இருக்கும் ரகுபதி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு உள்ளது. சிறையில் இருக்க வேண்டியவர் தற்போது சிறைச்சாலை துறைக்கு அமைச்சராக உள்ளது வேதனை அளிக்கிறது.
தமிழ்நாடு சுற்று சூழல் பாதுகாப்பில் நாம் 21வது இடத்தில் உள்ளோம். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது. இந்த இரண்டு அமைச்சர்களும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் செய்யவில்லை.
இலங்கைத் தமிழர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி. அங்கு 60 ஆயிரம் தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார். 120 கோடி மதிப்பீட்டில் இலங்கை யாழ்ப்பாணத்தில் கலாசார மையத்தை பிரதமர் மோடி கட்டி கொடுத்துள்ளார். இலங்கை ஈழ பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் மோடியால் மட்டுமே முடியும். புதுக்கோட்டை எம்பி தொகுதியை மீண்டும் கொண்டுவர கடிதம் எழுதி உள்ளோம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளது சீக்கிரம் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் அண்ணாமலை பேசினார்.
மேலும், பாதம் தேயத் தேய பாரதம் முழுதும் நடைபயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர், நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தர, மக்களை படை திரட்ட நடைபயணம் மேற்கொண்ட நேதாஜி, காந்திஜி, வ.உ.சிதம்பரனார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற தலைவர்களை எல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். மக்களுக்காக உழைக்க, மக்களைத் தேடி மக்கள் மத்தியில் செல்லும்போது தான், தலைமைக்கான பண்பு பட்டை தீட்டப்படுகிறது என்பதை, கடந்த ஒருசில நாட்களில் உணர்ந்து கொண்டேன்.
திருமயம் மலைக்கோட்டையில், கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இத்தனை பழமை வாய்ந்த ஊர் திருமயம் சுற்றுலாத் தலமாக மாற்றப்பட, தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். திருமயம் தொகுதியின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க, ‘சிப்காட்’ தொழில் வளாகம் அமைக்கப்படும் என உறுதிமொழி அளித்து, ஓட்டு பெற்றனர். ஆனால், அதை செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து ரகுபதி, மெய்யநாதன் என, இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். அதனால், ஊருக்கு எந்த நன்மையும் இல்லை.
அப்பா திருநாவுக்கரசு, திருச்சி எம்.பி., – மகன் எஸ்.டி.ராமச்சந்திரன், அறந்தாங்கி எம்.எல்.ஏ., அந்த குடும்பம் நல்லாத்தான் வளருது. ஆனால், ஓட்டு போட்ட மக்கள் தான் நடுத்தெருவில் நிற்கின்றனர்.
அறந்தாங்கி அருகே சுப்ரமணியபுரத்தில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளியில், 1,300 மாணவர்கள் படிக்கின்றனர். கிடங்கிவயலில் இருந்து நாகுடி வழியாக, சுப்ரமணியபுரம் செல்லும் பஸ், 10 கிராமங்களை கடந்து செல்கிறது. பள்ளி நேரத்தில் இந்த வழியாக செல்லும் ஒரே பஸ் என்பதால், கூட்ட நெரிசலில் தான் பிள்ளைகள் பள்ளிக்கு செல்கின்றனர்.
நேற்று, 12ம் வகுப்பு படிக்கும் மாணவி, கூட்ட நெரிசலால் பஸ்சில் இருந்து விழுந்து, காலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. அப்பா எம்.பி.,யாகவும், மகன் எம்.எல்.ஏ.,வாகவும் இருந்து என்ன பிரயோஜனம்? கூடுதல் பஸ் இயக்கச் சொல்லி, கோரிக்கை மனு கொடுத்தும் பலன் இல்லை. சாதாரண விஷயத்தைச் செய்து கொடுக்க முடியவில்லை என்றால், எம்.எல்.ஏ., — எம்.பி.,யாக இருப்பதே வீண்.
அப்பா — மகனான ஸ்டாலினும், உதயநிதியும் எம்.எல்.ஏ.,வாக, அமைச்சர்களாக இருந்தும் எந்த பயனும் இல்லை. அதேபோலத் தான், திருநாவுக்கரசும் ராமச்சந்திரனும். ஊருக்கு பத்து சாராய கடை திறக்க தெரிந்த உங்களுக்கு, கூடுதல் பஸ் விடத் தெரியாதா?
சொன்னது என்ன ஆச்சு?
* ஜூன், ஜூலை மாதம், கர்நாடக அரசு வழங்க வேண்டிய காவிரி நீரை பெற்றுத் தரவில்லை
* டெல்டா கண்மாய் பகுதிகளில் கல்லணை, கவினாடு, மாரப்பூர் பெரிய கண்மாய், வாகைவாசல் பெரிய கண்மாய் துார்வாரப்படவில்லை. அறந்தாங்கி வட்டம் மறமடக்கி வில்லுன்னி ஆறு துார்வாரப்படவில்லை
* நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை, 2013ம் ஆண்டை ஒப்பிடுகையில், 67 சதவீதம் பிரதமர் உயர்த்திஉள்ளார். பயிர் காப்பீடு திட்டம் வழங்குகிறார்.- இதுவரை விவசாயிகளுக்கு இழப்பீடாக, 1,231 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை. சாராய அரசு நடத்தும் நீங்கள், அனைத்து ‘டாஸ்மாக்’ கடைகளிலும், உங்கள் புகைப்படத்தையும், உங்கள் தந்தையின் புகைப்படத்தையும் வையுங்கள்.
மற்ற அரசு அலுவலகங்களில், இருவர் புகைப்படங்களை வைத்துக் கொள்ளும் நீங்கள், அரசு நடத்தும் டாஸ்மாக் கடையில் மட்டும் வைக்க தயக்கம் காட்டுவது ஏன்; கூச்சமாக உள்ளதா?
ஆறு நாட்களைக் கடந்து, பாதயாத்திரை மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக நடந்து வருகிறது. கையில் முளைப்பாரியுடன் வந்து, மரபின்படி குலவையிட்டு வரவேற்று, அன்பு காட்டும் தாயுள்ளங்கள் அனைவரையும் வணங்குகிறேன்.
பயணம் தொடரும்…