சென்னை: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில் மீண்டும் கட்சியில் அன்வர் ராஜா இணைந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரலாம் என்ற அறிவிப்பை அடுத்து அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுவின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான அன்வர் ராஜா ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அண்ணா, எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருந்து வந்தார்
2021 சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து, அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 2021 நவம்பர் மாதத்தில் நடைபெற்றது. கூட்டத்தின்போது, சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், எடப்பாடி பழனிச்சாமியை அன்வர் ராஜா விமர்சித்துப் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அன்வர் ராஜாவை தாக்க முற்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால் அரசியல் அனாதையான நிலையில், மீண்டும் கட்சியில் இணையும் ஆசையில், எம்ஜிஆர் போஸ்டர் அடித்து, கட்சியில் இருந்து விலகியிருக்க முடியவில்லை என தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.
அதிமுக தற்போது முழுமையாக எடப்பாடி பழனிச்சாமியின் கைக்கு வந்துள்ளதால், அதிமுக பொதுச்செயலாளரை சந்தித்து தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அன்வர் ராஜா அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.