சென்னை:  சென்னை புறநகர் பகுதியில் இன்று அதிகாலை காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தில் போலீஸாரை வெட்டிய இரண்டு ரவுடிகள், இன்று அதிகாலையில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  குற்றம் சாட்டப்பட்டவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது, குற்றவாளிகளின் முழங்காலுக்குக் கீழே மட்டுமே போலீசார் சுட்டு பிடிக்க வேண்டும்.,  ஆனால், காவல்துறையினர், மனித உயிர்களை பொருட்டாக மதிக்காமல்,  குற்றவாளிகளை  என்கவுண்டர் செய்வது தொடர்ந்து வருகிறது.

இதுகுறித்து காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில், தாம்பரம் அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீஸார் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு காரை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் காரை நிறுத்தாமல் வேகமாக வந்து காவல்துறையின் வாகனத்தில் மோதி நின்றனர்.

அதைத்தொடர்ந்து அந்த காரில் இருந்து, கீழே இறங்கிய ரவுடிகள் இருவர் தங்களிடம் இருந்த ஆயுதங்களால் போலீஸாரை தாக்கத் தொடங்கினார்கள். இதில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனின் கையில் வெட்டுப்பட்டுள்ளது. அதையடுத்து போலீஸார் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த இருவரும் காயம் அடைந்தனர். அதையடுத்து போலீஸார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அவர்களைக் கொண்டு சென்றனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசாரின் விசாரணையில் அந்த இருவரும் வினோத் மற்றும் ரமேஷ் என்பதும், வினோத் மீது 10 கொலை வழக்கு, 15 கொலை முயற்சி வழக்குகள் உட்பட ஏராளமான வழக்குகள் இருப்பதும், அதே போல ரமேஷ் மீது 5 கொலை வழக்கு, 7 கொலை முயற்சி வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் இருப்பதும், அவர்கள் ஓட்டேரி காவல் நிலைய பதிவேடு குற்றவாளிகள் என்பதும் தெரிய வந்துள்ளது.  காயம் அடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.