ஒகேனக்கல்:
கேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து, அங்கு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் காவிரியில் நீர்வரத்து அதிகரித்து ஒகேனக்கல் அருவியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அறிவுகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் கடந்த நான்கு நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வரத்து இருந்த நிலையில் தற்போது நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. நேற்று காலை முதல் நீர்வரத்து குறைய தொடங்கியதன் காரணமாக 15 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்து, தற்போது 8000 கன அடியாக சரிந்துள்ளது. வெள்ள எச்சரிக்கை அபாயம் குறைந்ததன் காரணமாக அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று பிற்பகல் முதல் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்ததன் காரணமாக ஐந்து நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.