சென்னை:  நெய்வேலியில் என்எல்சிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலத்தில் விவசாயிகள் பயிர்கள் செய்திருந்த நிலையில், அதை தமிழ்நாடு அரசு காவல்துறை உதவியுடன்  பொக்லைன் கொண்டு  அழித்து கால்வாய் தோண்டிய என்எல்சி நிறுவனத்தின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, இந்த செயலை கண்டபோது, கண்ணீர் விட்டு அழுததாக தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்கான பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே, கையகப்படுத்தப் பட்டு அதற்கான நிவாரணமும் வழங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தின் வழியாக, என்எல்சி சுரங்கத்தில் இருந்து வெளியேறும் நீர், கடலுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இன்னும் சில மாதங்களில் மழைக்காலம் தொடங்க உள்ளதால், தண்ணீரை வெளியே கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை என்எல்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

ஆனால், என்எல்சி கையகப்படுத்திய இடங்களில் விவசாயிகள் நெற்பயிர்கள் நடவிட்டு  இருந்ததால், அதை பொக்லைன் இயந்திரம் கொண்டு என்ல்சி நிர்வாகம் அழித்து, கால்வாய் தோண்டும் பணியை மேற்கொண்டது. இதற்கு அந்த பகுதி விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பாமக இந்த விஷயத்தை கையிலெடுத்து வன்முறையை தூண்டியது. நேற்று ( 28ந்தேதி) என்எல்சிக்கு எதிராக முற்றுகை போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாசை காவல்துறையினர் கைது செய்த நிலையில், பாமகவினர் பல பகுதிகளில் கலவரங்களில் ஈடுபட்டு, பேருந்து உள்பட பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினர்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் என்.எல்.சி. தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசர்களை விட்டு கால்வாய் தோண்டும் பணிகளை பார்க்கும்போது அழுகை வந்ததாக வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி வேதனை தெரிவித்தார்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலே பயிர்கள் அழிக்கப்படுவதைக் காண முடியவில்லை என்றார் நீதிபதி. நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்தது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும்,   நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும்,  என்.எல்.சி நிறுவனம் மற்றும் அங்கு பணிக்குச் செல்லும் ஊழியர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.