ராமேஸ்வரம்
நேற்று ராமேஸ்வரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் பாஜக பாதயாத்திரையைத் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் `என் மண், என்மக்கள்-மோடியின் தமிழ் முழக்கம்’ என்ற கோஷத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொள்கிறார். வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை 234 தொகுதிகளிலும் மக்களிடம் விளக்கும் வகையில் இந்த நடைப்பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேற்று மாலை இந்த நடைப்பயண தொடக்க விழா ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள திடலில் நடந்தது. அங்கு நாடாளுமன்ற கட்டிடம் வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு கட்சிக் கொடிகள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் என வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு அண்ணாமலையின் நடைப்பயணத்தைத் தொடங்கிவைத்தார். அவர் நேற்று மதியம் டில்லியிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மண்டபம் வந்து அங்கிருந்து காரில் விழா மேடைக்கு வந்தார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா, மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் வரவேற்று அமித்ஷாவை மேடைக்கு அழைத்து வந்தனர்.
விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஜான்பாண்டியன், தேவநாதன் யாதவ், ஏ.சி.சண்முகம், அர்ஜுன் சம்பத், திருமாறன், செல்லமுத்து உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது மோடி அரசின் சாதனைகளை விளக்கும் புத்தகம் வெளியிடப்பட்டது.