டெல்லி: போலி மருந்துகளை தடுக்கும் வகையில் ஆகஸ்டு 1முதல் உயிர்காக்கும் மருந்துகளில் கியூஆர் கோடு அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான நடவடிக்கையில் மத்தியஅரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
நாடு முழுவதும், போலி மருந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதை தடுக்கும் வகையில், போலி மருந்துகளை தடுக்கும் வகையில், உயிர்காக்கும் 300 முக்கிய மருந்துகளின் அட்டைகளில், பிரத்யேகமாக, கியூ.ஆர்., கோடு அச்சிட்டு விற்பனை செய்யும் நடைமுறை ஆகஸ்டு 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
முக்கிய மருந்து மற்றும் மாத்திரைகள் குறித்த தனிப்பட்ட QR குறியீடு பேக்கேஜிங்கின் மூடிக்குள் பதியப்பட்டிருக்கும் அல்லது மருந்துகளின் அட்டையில் பதியப்பட்டிருக்கும். இந்த கியூஆர் கோடு மூலம் சரிபார்ப்புத் தரவை ஆன்லைனில் அணுக, ஸ்மார்ட்போன் சாதனங்களின் உதவியுடன் ஸ்கேன் செய்யப்படும். ஸ்கேன் செய்யும்போது, அந்த மருந்துகளின் தயாரிப்பு அசல் மற்றும் பாதுகாப்பானதா என்பதைச் சரிபார்க்க முடியும். மேலும், தயாரிப்பு உண்மையானதா என்பதைச் சரிபார்க்க அனுமதிக்கும் டோக்கனைக் கொண்ட தனித்துவமான இணையதளத்தையும் பார்வையிட முடியும்.
மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, QR குறியீட்டில் தனிப்பட்ட தயாரிப்பு அடையாளக் குறியீடு, மருந்தின் பொதுவான பெயர், பிராண்ட் பெயர், உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி, தொகுதி எண், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி மற்றும் உற்பத்தி உரிம எண் ஆகியவை இருக்கும்.
இந்தியாவில் ஏராளமான போலி மருந்துகள் நடமாடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதுபோல அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அறிவுசார் சொத்து உரிமைகள் பாதுகாப்பு குறித்த 2019 ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் வழங்கப்படும் மருந்துகளில் 20% வரை போலியானவை. 2018 ஆம் ஆண்டில், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்திய சந்தையில் உள்ள அனைத்து பொதுவான மருந்துகளில் சுமார் 4.5% தரமற்றவை என்று மதிப்பிட்டுள்ளது.
நோயாளிகளின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் போலி மருந்துகளை குடிமக்களாகிய நாம் அறிந்திருக்க வேண்டும் மற்றும் அத்தகைய மருந்துகளின் உற்பத்தி மற்றும் புழக்கத்தைத் தடுக்கும் மற்றும் உற்பத்தியை ஒவ்வொரு முனையிலும் நிறுத்துவதற்கு வலுவான விதிமுறைகளை வைத்திருக்க அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து போலி மருந்துக்களை தடுக்கும் வகையில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
அதன்படி, நாட்டில் விற்கப்படும் அனைத்து வகையான, மருந்து – மாத்திரைகளும், மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன. இருந்தாலும், போலி மருந்துகள் விற்பனையும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, போலி மருந்துகளை தடுக்கும், வகையில், முன்னணி நிறுவன பெயரிலான மருந்துகளின் தரத்தை உறுதி செய்யவும், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம், சில மாதங்களுக்கு முன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி, முதல்கட்டமாக, இருதய நோய், புற்றுநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்பட 300 முக்கியமான நோய்களுக்கான மருந்துகளின் அட்டைகளில், கியூ.ஆர்., அல்லது பார் கோடு அச்சிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு ஆகஸ்டு 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பொதுமக்கள் உண்மையான மருந்தா, போலியான மருந்தா என்பது குறித்து, போன் மூலம் ஸ்கேன் செய்து, உண்மைத் தன்மையை அறியலாம்.