சென்னை: ஆகஸ்டு 4ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கி பாஜகவுக்கு எதிராக திட்டங்களை வகுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் பாஜக சார்பில், மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணம் ராமநாதபுரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் தொடங்க உள்ளது. இதில் கலந்துகொள்ள கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைவர் என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்-க்கும், அமமுக தலைவர் டிடிவி தினகரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த நடைபயண தொடக்க விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் வருகிற ஆகஸ்டு 4ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என அதிமுக தலைமை அறிவித்து உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் வருகிற ஆகஸ்டு மாதம் 20 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாடு தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தல், பாஜக கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.