திருச்சி: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் என்பதே இருக்காது என திருச்சி திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
மத்திய பாஜகஅரசுக்கும், திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி கூட்டணிகளுடன் இணைந்து, அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், திருச்சியில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த திமுக பொறுப்பாளர்கள், முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவிற்கு அனைவருக்கும் பொதுவான ஆட்சியை திமுக நடத்திக் கொண்டிருக்கிறது. மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டம், பள்ளியில் காலை சிற்றுண்டித் திட்டம், விவசாய நலன் சார்ந்த திட்டம் என மக்கள் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் பயன்பெறும் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால், சிலர் நம் மீது காழ்ப்புணர்வு கொண்டு பொய்ச் செய்திகளை பரப்பிக் கொண்டுள்ளனர். ஆனால், பொய்க்கு ஆயுசு குறைவு. தேவையில்லாத பலவற்றை பேசி நம்மை திசை திருப்பும் முயற்சியில் ஆளுநர் செயல்படுகிறார். தேர்தல்வரை அவர் அப்படி பேசுவதே நமக்கு நல்லது.
மத்தியில் மேலும், பாஜக ஆட்சி தொடர்ந்தால், இந்திய அரசமைப்பு சட்டமே இனி இருக்காது. வரும் தேர்தலில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதே முக்கியம். முன்பு குஜராத்தில் நடந்தது. இப்போது, மணிப்பூரில் நடைபெறுகிறது. மணிப்பூரைப் போன்று வேறு மாநிலங்கள் உருவாகக் கூடாது. அதற்கு பாஜக வீழ்த்தப்பட வேண்டும். இந்தியாவின் கட்டமைப்பையே பாஜக சிதைத்துவிட்டது. இந்த நிலை இனியும் தொடரக் கூடாது. அதற்கு வரும் தேர்தலில் பாஜக-வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
திமுகவை வாரிசு கட்சி என தொடர்ந்து பிரதமர் மோடியும், பாஜக-வினரும் பிரசாரம் செய்கின்றனர். ஆமாம், நாங்கள் ஆரியத்தை வீழ்த்தும் திராவிடத்தின் வாரிசுகள். பெரியார், அண்ணா, கருணாநிதி யின் வாரிசுகள். எனவே, நாங்கள் வாரிசுகள் என தைரியமாக கூறுகிறோம். பாஜக யாருடைய வாரிசு? பாஜக கோட்சேவின் வாரிசு என்பதை தைரியமாக சொல்ல இயலுமா?.
எடப்பாடி பழனிசாமியை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழல் குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். சிபிஐ விசாரணைக்கு தடைக் கோரி நீதிமன்றம் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழல் குறித்து பிரதமர் பேசக் கூடாது. ஊழல், முறைகேடுகளை காட்டி ஆட்சியை கலைத்துவிடுவோம் என மிரட்டியே அதிமுக-வை பாஜக அடிமையாக வைத்திருந்தது.
இதனால், தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கும் நிலை உருவானது. தமிழகத்தின் உரிமைகளை கைவிட்ட அதிமுகவும், அதை காவு வாங்கிய பாஜகவும் கரம் கோர்த்து இன்று தேர்தல் களத்திற்கு வருகிறார்கள். தமிழகத்தில் அவர்களை வீழ்த்தியே ஆக வேண்டும். இந்தியாவைக் காப்பற்றப்போவது இந்தியா கூட்டணிதான்.
தமிழை – தமிழினத்தை – தமிழ்நாட்டு மக்களை – இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கான களம் தயாராகிவிட்டது. நாடும் நமதே. நாற்பதும் நமதே. இந்தியா வெல்லும். அதனை 2024 தேர்தல் சொல்லும்.
இவ்வாறு பேசினார்.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,
திருப்புமுனை தரும் தீரர்கள் கோட்டமான திருச்சியில், வாக்குச்சாவடி வீரர்களிடம் அவர்களின் கடமை இன்றைய காலத்தின் தேவை என்பதை எடுத்துரைத்தேன். வெறுப்பையும் பிரிவினையையும் மக்களிடையே விதைத்தவர்கள் இப்போது #INDIA-வின் மக்களின் ஒற்றுமையைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். களம் காணுவோம்! களமாடுவோம்! நாற்பதும் நமதே! நாடும் நமதே! என கூறியுள்ளார்.