‘கக்கன்’ வாழ்க்கை வரலாறு படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
பொது வாழ்வில் எளிமையையும், நேர்மையையும் தனது கடைசி மூச்சு வரை கடைபிடித்த அரசியல் தலைவர் கக்கன். காங்கிரஸ் கட்சியின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான இவரது வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக்கப்பட்டு வருகிறது.
பிரபு மாணிக்கம் இயக்கி வரும் “கக்கன்” திரைப்படத்தை சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. தேவா இசை அமைக்கும் இந்த படத்திற்கு வெங்கி ஒளிப்பதிவு செய்கிறார்.
எளிமைக்குப் பெயர்போன மூத்த அரசியல்வாதியும் சுதந்திர போராட்ட வீரருமான கக்கனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இசை மற்றும் டிரெய்லரை வெளியிட்டார்.
இந்த விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் நிர்வாகிகள் ஈவிகேஸ் இளங்கோவன், கோபண்ணா, ஹசன் மௌலானா, அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், தியாகி கக்கனின் மகள் கஸ்தூரி பாய், சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் எஸ்.ராஜேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
விடுதலைப் போராட்ட வீரர், மக்களவை காங்கிரஸ் உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், தமிழக அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த தியாகி பி. கக்கன் அவர்களைப் பற்றி, சங்கர் மூவிஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த திரு. ஜோசப் பேபி தயாரித்து வழங்கும் 'கக்கன்' திரைப்பட ஒலிநாடா… pic.twitter.com/y60xJIiKXZ
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) July 25, 2023
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராகவும் காமராஜர் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் முதல்வராக இருந்த போது அவர்களின் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தவர் கக்கன்.
தவிர, மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் நேரு ஆட்சி காலத்தில் 1952 முதல் 1957 வரை எம்.பி.யாகவும் பதவி வகித்தார்.
கக்கன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது. கக்கன் பிறந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டியிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டைத் தொடர்ந்து விரைவில் இந்த படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.