மணிப்பூரில் மக்களிடையே அமைதி ஏற்படுத்த அம்மாநில முதல்வர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அமைதிக்காக இந்திய மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று தாக்குதலுக்கு உள்ளான பாஜக எம்.எல்.ஏ. வுங்ஜாகின் வால்டேவின் மகன் ஜோசப் வால்டே கூறியுள்ளார்.

இதுகுறித்து ‘இந்தியா டுடே’ தொலைக்காட்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் “பிரதமர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை நிறுத்திவிட்டு உள்நாட்டில் மக்கள் படும் துயரங்களை போக்க கவனம் செலுத்த வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

மணிப்பூர் மாநில தாளொன் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வும் குக்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவருமான வுங்ஜாகின் வால்டே மெய்தீய் தீவிரவாதிகள் மூலம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கடந்த மே 4 ம் தேதி முதல்வர் பைரன் சிங்-குடன் நடைபெற்ற சந்திப்பின் போது எச்சரித்தார்.

இதனையடுத்து வீடு திரும்பிய வுங்ஜாகின் வால்டே மீது அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய கும்பல் அவர் மீது மின்சாரத்தை பாய்ச்சியது மட்டுமல்லாமல் அவர் மீது நடத்திய தாக்குதலில் அவரது மண்டை உடைந்தது இந்த சம்பவத்தில் அவரது ஓட்டுநர் உயிரிழந்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து இம்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வுங்ஜாகின் வால்டே-வுக்கு மூளை செயலிழந்த நிலையில் டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இரண்டுமாத சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய அவரை சந்தித்த மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயிடம் அவரது குடும்பத்தினர், அவருக்கு நேர்ந்த நிகழ்வு குறித்தும் அம்மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறை குறித்தும் விவரித்தனர்.

அப்போது பேசிய வால்டேவின் மனைவி “எனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது முதல்வர் பைரன் சிங் ஒருமுறை தொலைபேசியில் பேசினார்” என்று கூறினார். தவிர, டெல்லி மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஒருவர் வந்து பார்த்து சென்றதாக கூறினார்.

மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட தனது கணவரை காண பிரதமரோ பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகிகளோ வரவில்லை என்றும் பிரதமரை பார்த்து அவரிடம் இதுகுறித்து நீதிகேட்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக மணிப்பூரில் கலவரம் ஓயாத நிலையில் அம்மாநில முதல்வருடன் பேசிவிட்டு வீடு திரும்பிய பழங்குடியின பாஜக எம்.எல்.ஏ. மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது குறித்து வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் : முதல்வருடன் பேசிவிட்டு வீடு திரும்பிய பழங்குடியின பாஜக எம்.எல்.ஏ.வுக்கு உடல்நிலை மோசம்… 2 மாதங்கள் கழித்து இன்று வீடு திரும்பினார்…