வாரணாசி: உ.பி. மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி சிவன்கோவிலை இடித்து கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்த நிலையில், இந்த மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொல்லியில்துறை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பலத்த பாதுகாப்புடன் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள இருந்தனர். இந்த நிலையில், தொல்லியில்துறை ஆய்வை 26ந்தேதி மாலை 5மணி வரை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த மசூதியானது, சிவன் கோவிலை இடித்து அதன்மேல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. இந்த நிலையில், ஞானவாசி மசூதியில் உள்ள சிவன்கோவிலில், இந்துக்கள் வழிபட அனுமதி வழங்க வேண்டும் இந்து பெண்கள் ஐந்து பேர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். முதலில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
பின்னர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி (ஏஐஎம்) கமிட்டி மற்றும் உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. “1991 ஆம் ஆண்டின் வழிபாட்டு தலங்கள் சட்டம் மற்றும் 1995 ஆம் ஆண்டின் மத்திய வக்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் மனுதாரர்களின் கோரிக்கை விசாரணைக்கு உகந்தது அல்ல” என ஏஐஎம் கமிட்டி மனுவில் குறிப்பிட்டிருந்தது.
வழக்கின் விசாரணையின்போது, மசூதி வளாகத்தில் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்கக் கோரி மனு தாக்கல் செய்த ஐந்து இந்து பெண்களில் நான்கு பேர், சிவலிங்கம் போன்ற சிலையின் தொன்மத்தை கண்டறிய கார்பன் டேட்டிங் போன்ற விஞ்ஞானப்பூர்வமான ஆய்வை நடத்த வேண்டும் என மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதில், இந்து கடவுகளின் சிலைகள், மசூதிக்கு உள்ளே இருப்பதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கிடையில், மசூதி வளாகத்தில் உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வீடியோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, சிவலிங்கம் போன்ற தொன்மையான சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு ஞானவாபி மசூதி கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால் சர்ச்சை எழுந்தது. மசூதியில் உள்ள சிவலிங்கம் என சொல்லப்படும் சிலை, நீரூற்று என்றும் மசூதிக்கு செல்லும் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு முன்னதாக தங்களைதானே சுத்தம் செய்ய அதை பயன்படுத்தி வருவதாகவும் மசூதி கமிட்டி விளக்கம் அளித்திருந்தது.
இந்த வழக்கின் பல்வேறுகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மசூதியில் உள்ள சிலையின் தொன்மையை கண்டறிய விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது அதன்படி, தொல்லியல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் இன்று தங்களது ஆய்வுகளை தொடங்க இருந்தனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் அவசர வழக்காக விசாரிக்க கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஞானவாபி மசூதியில், அகழ்வாராய்ச்சியுடன் பணியைத் தொடர ஜூலை 26 மாலை 5 மணி வரை நிறுத்தி வைக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
“உண்மையான உண்மைகள்” வெளிவருவதற்கு அறிவியல் விசாரணை “அவசியம்” என்று கூறி, மசூதி ஏற்கனவே உள்ள இந்துக் கோவிலின் மீது கட்டப்பட்டதா என்பதை அறிய ASI ஆல், ஞானவாபி மசூதியின் முத்திரையிடப்பட்ட பகுதியைத் தவிர்த்து, மற்ற பகுதியில் விரிவான ஆய்வுக்கு நடத்த வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் தடை போட்டுள்ளது.