தென்காசி: பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவியிடம், டிசி கொடுத்துவிடுவேன் என அரசு பள்ளி ஆசிரியை மிரட்டல் விடுத்ததால், மனமுடைந்த பிளஸ்1 மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவியை மிரட்டிய அரசு பள்ளி உதவி தலைமையாசிரியை இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
ஆசிரியர் பணி என்பது சாதாரண பணி அல்ல, அது தன்னலமற்ற ஒரு பணி. மாணாக்கர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில், விஞ்ஞான வளர்ச்சி, சட்ட திட்டங்கள் போன்றவற்றால், மாணாக்கர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் தயங்கும் சூழல் உருவாகி உள்ளது. மீறி மாணாக்கர்களை கண்டித்தாலோ, குச்சியால் தாக்கினாலோ ஆசிரியர்கள்மீது மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் தாக்குதல் நடத்தும் அளவுக்கு நிலைமை மாறி உள்ளது. மேலும் தேவையற்ற சட்டத்தைக்காட்டி அவர்கள்மீது வன்கொடுமை சட்டம் பாய்ச்சப்படுகிறது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம், புளியங்குடியில் அரசு பள்ளிக்கு லேட்டாக வந்த மாணவியை கண்டித்ததால், அந்த மாணவி தற்கொலை முடிவை நாடியுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தற்கொலை செய்த விவகாரத்தில் உதவி தலைமையாசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், டி.எம்.புதுக்குடியைச் சேர்ந்தவர் கருப்பசாமி மாரியம்மாள் தம்பதியின் மகள் முனீஸ்வரி (வயது 16). இவர் புளியங்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்துவந்தார். இவர் கடந்த 18-ம் தேதி முனீஸ்வரி மதிய இடைவேளைக்குப் பின்பு வகுப்புக்கு தாமதமாக வந்துள்ளார். அப்போது வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்த உதவித் தலைமையாசிரியை, “ஏன் தாமதமாக வந்தாய்? என்று கடிந்து கொண்டதுடன், இதுபோல வந்தால், தலைமை ஆசிரியையிடம் சொல்லி டி.சி வாங்கிக் கொடுத்துவிடுவேன்” என மிரட்டியுள்ளார்.
இதனால், மனமுடைந்த மாணவி முனீஸ்வரி வீட்டுக்குப் போனதும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்த மாணவியின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த நிலையில், மாணவி எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து, மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில் உதவி தலைமையாசிரியை நீலாம்பிகையை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.