ஜம்மு
அமர்நாத் யாத்திரையில் நடிகை சாரா அலி கான் பங்கேற்றதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையான சாரா அலி கான் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான கேதார்நாத் படத்தில் நடித்து பாலிவுட்டில் இளம் நடிகையாக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் நடிகர் தனுஷ் நடித்த அத்ரங்கி ரே என்ற படத்திலும் நாயகியாக நடித்து உள்ளார்
சாரா அலி கான் நடிகர் சைப் அலி கானின் முதல் மனைவியான அம்ரிதா சிங்குக்கு மகளாகப் பிறந்தவர் ஆவார். இவர் தந்தை முஸ்லீம் மற்றும் தாயார் இந்து என்ற நிலையில், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிப் பரபரப்பு ஏற்படுத்துபவர் ஆவார்.
ஏற்கனவே அவர் வாரணாசி நகரில் உள்ள புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உள்ளூர் பண்டிதர்களும், துறவிகளும் இதற்குக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தனர்.அவர் கோவிலுக்குச் சென்றதுடன், கங்கா ஆரத்தி நிகழ்விலும் கலந்து கொண்டார். அவரது தாயார் அம்ரிதா சிங் அப்போது உடன் இருந்துள்ளார்.
கோவிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைவதற்குத் தடை என்ற அறிவிப்புப் பலகை வைத்துள்ள நிலையில், அவரது வருகைக்குக் கோவில் நிர்வாகமும் கண்டனம் தெரிவித்து இருந்தது.
தற்போது காஷ்மீரில் நடந்து வரும் அமர்நாத் யாத்திரையில் அவர் இன்று கலந்து கொண்டு உள்ளார். இவர் பக்தர்களுடன் பக்தர்களாக நீல வண்ண ஆடையுடன், காவி துண்டு மற்றும் கையில் தடி எனப் பாதுகாவலர்கள் சூழ நடந்து சென்றார். இதையொட்டி அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.