பெங்களூரு
உடல்நலக்குறைவால் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மரணம் அடைந்தார்.
கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். இவர் கடந்த 1970 முதல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 52 வருடங்களுக்கு மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
அண்மையில் உம்மன் சாண்டிக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டதால் சில மாதங்களுக்கு முன் ஜெர்மனிக்குச் சென்று சிகிச்சை பெற்றார். பிறகு பெங்களூருவில் சின்மயா மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு மாநில அரசின் அறிவுறுத்தலின்படி, நிபுணர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்தனர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் உம்மன் சாண்டியின் (73) உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் உறுதி செய்யப்பட்டது. அவர் மரணம் குறித்து அவரது மகன் தகவல் தெரிவித்தார்.
கடந்த 2004-06 மற்றும் 2011-16 ஆண்டுகளில் கேரள முதல்வராக உம்மன்சாண்டி பதவி வகித்தார். கடந்த 2004-2006-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த ஏ.கே.ஆண்டனி பதவி விலகியதை அடுத்து, உம்மன்சாண்டி முதல்வராகப் பதவியேற்றார். பிறகு ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சி தலைவராகப் பணியாற்றினார்.
உம்மன் சாண்டி கடந்த 2011ல் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். பெங்களூருவில் தற்போது எதிர்க்கட்சி கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் நாட்டின் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூருவில் உள்ளனர். எனவே ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.