சென்னை
சென்னை எண்ணூர் கடற்கரைச் சாலை ஓரம் கொட்டப்பட்ட 356 டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
சிலர் சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையை ஒட்டியுள்ள கடற்கரையோரம் கட்டிடக் கழிவுகளைக் கொட்டிச் செல்வதால் கடல் சுற்றுச்சூழல் மாசடைகிறது. பொது நல ஆர்வலர் சுரேஷ் என்பவர் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கட்டிட மற்றும் மணல் கழிவுகளை அகற்ற உத்தரவிட்டார். சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் நவேந்திரன், செயற்பொறியாளர் தணிகை வேல், உதவிப் பொறியாளர் அமல்ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் தலைமையில் 5 லாரிகள், 2 ஜே.சி.பி. வாகனங்களைப் பயன்படுத்தி, கழிவுகளை அகற்றும் பணி நேற்று நடந்தது.
இவ்வாறு மொத்தம் 57 லாரிகளில் 356 டன் கழிவுகள் அகற்றப்பட்டு, பள்ளமாக இருந்த புதிய பஸ் நிலையம் பின்புறம் கொட்டப்பட்டது. இதனால் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கொட்டியிருந்த கழிவுகள் முழுவதுமாக அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.