சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமை தொகை பெறுவதற்குரிய விண்ணப்பங்கள் வழங்குவதற்கு ஜூலை 20 முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைம்தொகை திட்டம் செப்டம்பர் 15ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. அதில் மகளிர் உரிமைத் தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு ரூபாய் 1,000 கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பயனர்கள் தேர்வு செய்யும் நடவடிக்கைகளை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, ரேசன் கடை அலுவலகம் அருகே அதற்கான முகாம்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை கண்காணிக்க மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்த பணியில் தன்னார்வலர்கள் உட்படுத்தப்பட உள்ளனர்.
இந்j நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன்கள், விண்ணப்ப விநியோகம் ஜூலை 20ம் முதல் தொடங்கும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரும் 17ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மண்டலம் முழுமைக்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
18ம் தேதிக்கு முன்பாக மண்டலத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடை பணியாளர்களுக்கும் 30 பேர் கொண்ட குழுக்களாக முதன்மை பயிற்சியாளர்கள் இணை பதிவாளர்கள், துணைப் பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர்கள் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும்.
18ம் தேதி முகாம் நடக்கும் இடம் குறித்து நியாய விலை கடைகளில் தமிழில் தகவல் பலகை அமைக்க வேண்டும்.
குடும்ப அட்டை எண், முகாம் நடக்கும் இடம் மற்றும் நாள் முதலிய விவரங்களை விண்ணப்ப படிவங்களில் எழுத வேண்டும்.
20ம் தேதி முதல் டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு உபயோகிக்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.