சென்னை

னது செயல்களால் ஆளுநர் ஆர் என் ரவி மூக்கறு பட்டுக் கொண்டுள்ளதாகத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக ஆளும் கட்சியான திமுகவுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.   சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கம் செய்தது இந்த மோதலை மேலும் அதிகமாக்கி உள்ளது.  இந்நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் செய்தியாளரைச் சந்தித்து உள்ளார்.

செய்தியாளரிடம் முதல்வர் மு க ஸ்டாலின்,

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி வந்தது முதல் ஏதாவது குழப்பம் ஏற்படுத்துவதையே தனது வேலையாக வைத்திருக்கிறார். இதை அவருக்குப் பலமுறை உணர்த்தியாகி விட்டது. ஆயினும் அவர் தன்னை மாற்றிக் கொள்வதாக தெரியவில்லை. ஆளுநர் ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக விடுத்த அறிக்கையானது, அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறுவது மற்றும் நிர்வாக ஒழுக்க மீறல் ஆகும்.

எந்த ஒரு அமைச்சரை நியமிப்பதும் அமைச்சரை நீக்குவதும் முதல்வரின் தனிப்பட்ட விருப்புரிமை சார்ந்ததே தவிர – வேறு யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை. ஆளுநர் ஒரு அமைச்சருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதால் – அவரைத் தான் நியமிப்பதாகவோ – அதனாலேயே நீக்கி விடலாம் என்றும் பொருள் அல்ல. ஆளுநருக்கு அந்த அதிகாரம், இல்லை.

அதை அவர் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அவருக்கான வேலைகளை மட்டும் அவர் பார்க்க வேண்டும்.  அவர் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களைக்  கையெழுத்துப் போடாமல் வைத்துள்ளார்.

அவற்றை கையொப்பமிட்டு அனுப்பாமல் ஆளுநர்  தனக்கு உரிமையில்லாத செய்கைகளில் மூக்கை நுழைத்து மூக்கறு பட்டுக் கொண்டு இருக்கிறார்.அவருக்கு  தமிழகம் வளர்வது, அமைதியாக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. அவர் குழப்பம் ஏற்படுத்தி, இந்த மாநிலத்தைக் கெடுக்க நினைக்கிறார்”

என்று தெரிவித்துள்ளார்.