சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில் சேவைகள் தொடர்பான புதிய அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் புறநகா் பகுதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து இயக்கப்படும் புறநகர் மற்றும் மின்சார ரயில் சேவைகள் பயணிகளின் வசதிக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் ரயில் நேர அட்டவணை மாற்றி அமைக்கப் படும். தற்போது சென்னையில் மின்சார ரயில் சேவை மட்டுமின்றி மெட்ரோ ரயில் சேவைகளும் நடைபெற்று வருகிறது. புறநகர் மின்சார ரயில் சேவையானது, சென்னை சென்ட்ரலிலிருந்து ஆவடி, திருவள்ளூா், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூா் பகுதிகளுக்கும், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கும் 5 முதல் 15 நிமிஷங்கள் இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடப்பாண்டுக்கான புதிய ரயில் சேவை அட்டவணையை சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டு உள்ளது. அதில், சென்னை சென்ட்ரல், வேளச்சேரி, சென்னை கடற்கரையிலிருந்து ஆவடி, பட்டாபிராம், அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு 128 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போதைய அட்டவணையில் 124-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு இடையே 124 ரயில் சேவை இயக்கப்பட்டன. அவை தற்போது, 116 ரயில்கள் என குறைக்கப்பட்டு உள்ளன. மேலும், சில ரயில்களின் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு தினமும் 70 பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டன. இது, திருத்தப்பட்ட ரயில் அட்டவணைப் படி 61 ரயில்களாக குறைக்கப்பட்டன.
சென்னை புறநகர் மின்சார ரயில் அட்டவணை தற்போதைய பயணிகளின் வசதிக்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த ஒரு புதிய ரயிலும் அறிவிக்கவில்லை. ஏற்கெனவே இயங்கும் ரயில்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.