பெங்களூரு ஐ.டி. நிறுவனத்தில் புகுந்து இரண்டு பேரைக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரின் அம்ருதஹள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் ‘ஏரோனிக்ஸ் இன்டர்நெட் கம்பெனி’ என்ற இணையதள சேவை வழங்கும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினு குமார் மற்றும் நிர்வாக இயக்குநர் பனீந்திர சுப்ரமண்யா ஆகியோர் செவ்வாயன்று (ஜூலை 11) மாலை 4 மணிக்கு கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் பெங்களூரு மட்டுமன்றி நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இது தொடர்பாக பெலிக்ஸ் என்ற நபரை காவல்துறையினர் தேடிவருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், குனிகல் அருகே ஷபரீஷ் என்ற பெலிக்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் வினய் ரெட்டி மற்றும் சந்தோஷ் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்ததாக பெங்களூரு வடக்கு கிழக்கு இணை ஆணையர் லக்ஷ்மி பிரசாத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே காவல்துறையினர் இவர்களை மடக்கிப் பிடித்ததாகவும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானதாகவும் கூறினார்.
இந்த கொலையில் மற்றொரு இணையதள சேவை நிறுவனமான ஜி-நெட் நிறுவனத்தின் உரிமையாளர் அருண் குமார் ஆசாத்-துக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மரணமடைந்த வினு குமார் மற்றும் பனீந்திர சுப்ரமண்யா இருவரும் ஜி-நெட் நிறுவனத்தில் ஏற்கனவே பணிபுரிந்து வந்ததாகவும் அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறிய இருவரும் ‘ஏரோனிக்ஸ் இன்டர்நெட் கம்பெனி’ என்ற பெயரில் புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
ஜி-நெட் வாடிக்கையாளர்களை ஏரோனிக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களாக மாற்றிக் கொண்டதை அடுத்து இந்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையே தொழில் போட்டி ஏற்பட்டது.
இதனால் வினு குமார் மற்றும் பனீந்திர சுப்ரமண்யா இருவரையும் தீர்த்துக்கட்ட நினைத்த அருண் குமார் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெலிக்ஸ் உடன் சேர்ந்து திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பெலிக்ஸ் ஜி-நெட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சந்தோஷ் மற்றும் தனது நெருங்கிய கூட்டாளியான வினய் ரெட்டி ஆகியோருடன் சென்று இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த கொலைக்காக பெலிக்ஸ் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு அருண் குமார் பணம் கொடுத்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், “இந்த உலகம் ஏமாற்றுபவர்களால் நிறைந்துள்ளது அதனால் நான் அவர்களை காயப்படுத்துகிறேன். கெட்டவர்களை மட்டுமே காயப்படுத்துகிறேன் நல்லவர்களை அல்ல” என்று இந்த கொலை சம்பவம் குறித்த செய்தியை பகிர்ந்து “கெட்டவர்கள் மட்டுமே காயமடைவார்கள்” என்ற தலைப்பில் பெலிக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கே.ஜி.எப். படபாணியில் பதிவிட்டுள்ளார்.
பெலிக்ஸ்-ன் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு மற்றும் தொழில்போட்டி காரணமாக தனது முதலாளிக்காக கொலையில் ஈடுபட்டது ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது வினு குமார் மற்றும் பனீந்திர சுப்ரமண்யா ஆகிய இருவரும் கூலிப்படையாக செயல்பட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்த கொலையில் தொடர்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.