மதுரை: கட்டப்படாத மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவ பேராசிரியர்கள் பணி நியமனங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்காக மதுரை அடுத்த தோப்பூரில் 200 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், பல்வேறு காரணங்களால், இந்த திட்டம் தள்ளிப்போன நிலையில், பின்னர், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான நிதி ஒதுக்கப்படுவதாகவும், கட்டுமானப் பணி 2024-ம் ஆண்டு இறுதியில் தொடங்கி, 2028-ல் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை எற்று, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கை, அருகே உள்ள ராமநாதபுரம் மாவட்ட மருத்துவக்கல்லூரி களில் படிக்கும் வகையில், ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இந்த ஆண்டும், இரண்டாவது ஆண்டாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த மாணவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்துவருகின்றனர்.
இதற்கிடையில், எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் உள்பட முக்கிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு, மூத்த நரம்பியல் மருத்துவர் நாகராஜன் வெங்கடராமன் க நியமனம் செய்யப்பட்டார். ஆனால், அவர் உடல்நலக்குறைவால் காலமான நிலையில், மதுரை எய்ய்ம்ஸ் மருத்துவனைக்கு புதிய தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியா என்பவரை மத்தியஅரசு நியமித்தது.
இந்த நிலையில், தற்போது, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மனநலம், தோல் மருத்துவம், காது – மூக்கு – தொண்டை, கண் மருத்துவம், எலும்பியல் துறைகளுக்கான பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான நேர்காணலுக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது.