சென்னை
ஜூலை 26 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்ப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையினரால் சட்டவிரோத பணமோசடி வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்யப்பட்டார். நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி மருத்துவமனைக்குச் சென்று செந்தில் பாலாஜியைச் சந்தித்த பின்னர், ஜூன் 28-ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, காவேரி மருத்துவமனையிலிருந்து காணொலி காட்சி மூலம் கடந்த 28-ம் தேதி முன்னிறுத்தப்பட்டார். நீதிபதி அல்லி அவரிடம், எப்படி இருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். செந்தில் பாலாஜி தமக்கு வலி இருப்பதாகப் பதிலளித்தார். இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இன்றுடன் அது நிறைவடையும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26-ம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலை 2-வது முறையாக நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து காணொளி மூலம் முன்னிறுத்தப்பட்ட நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.