சென்னை:
மத்திய அரசு கொண்டு வரத் துடிக்கும் பொது சிவில் சட்டத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய சட்ட ஆணையத்திற்கு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை பிரிவு 25-ன்படி குடிமக்கள் அனைவரும் தாங்கள் சார்ந்துள்ள மத வழக்கங்களைப் பின்பற்றவும், பரப்பவும் உரிமை பெற்றவர்களாவர். இத்தகைய வேறுபாடுகள் நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை வலிமையாக்கி உள்ளது.
பொது சிவில் சட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் வலிமையாக எதிர்க்கிறது. காரணம், இந்தச் சட்டம் தனிநபர் உரிமையான எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியள்ள உரிமைகளை பறிப்பதற்கும், பிரிவு-29 வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பறிப்பதற்குமான முயற்சியாகும். பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தனிமனித உரிமைகளை பறிப்பது ஏற்புடையதல்ல.
பொது சிவில் சட்டம் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வாய்ப்பு உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது உலக நாடுகளே வியந்து பாராட்டும் நாடு, நமது இந்திய நாடு என்பதை ஒன்றிய அரசு மறந்துவிடக் கூடாது. எனவே, 22வது சட்ட ஆணையம் 21வது சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகம் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.