ஆவணங்களைத் திருடி போலி ஜி.எஸ்.டி. மூலம் உள்ளீட்டு வரியை திரும்பப்பெற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது அடையாளங்களைத் திருடி போலியாக ஜி.எஸ்.டி. பதிவு செய்யப்பட்டிருப்பதாக நொய்டா காவல்துறையில் கடந்த மே மாதம் வழங்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரித்து வந்த போலீசார் டெல்லி-யைச் சேர்ந்த கணவன் மனைவி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
போலி நிறுவனங்களும் போலி ரசீதுகளும் உருவாக்கப்பட்டு அதன் மூலம் ஜி.எஸ்.டி. உள்ளீட்டு வரியை திரும்பப்பெறும் மோசடி நடைபெற்று வருவதை தவிர்க்க அதிகாரிகள் முனைப்புடன் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் 6 லட்சத்திற்கும் அதிகமானோரின் ஆதார் தரவுகள், மொபைல் எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகளை திருடி அதன் மூலம் 3000 க்கும் மேலான போலி நிறுவனங்கள் பெயரில் ஜி.எஸ்.டி. பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த போலி நிறுவனங்களின் பெயரில் பொருட்களை வாங்கியதாகவோ அல்லது விற்றதாகவோ ரசீதுகளை தயார் செய்து அவற்றைப் பயன்படுத்தி ஜி.எஸ்.டி. மற்றும் ஐ.டி. நிறுவன அதிகாரிகளை மோசடி செய்து வந்தது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதாக ஏற்கனவே 18 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 3 பேர் சிக்கியுள்ளனர். இதனால் சுமார் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு வரி மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிடிபட்ட மூன்று பேரில் டெல்லியைச் சேர்ந்த தீபக் முர்ஜானி மற்றும் வினிதா ஆகியோர் கணவன் மனைவி என்று தெரியவந்துள்ளது இவர்களுடன் மும்பையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் யாசின் ஷேக் என்பவரும் இந்த மோசடியில் கூட்டணி அமைத்து செயல்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.