பெங்களூரில் தனியார் நிறுவன சி.இ.ஓ., மற்றும் நிர்வாக இயக்குநர் இருவரையும் அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஏரோனிக்ஸ் இன்டர்நெட் கம்பெனி’ என்ற தனியார் நிறுவன தலைமை செயல் அதிகாரி வினு குமார் மற்றும் நிர்வாக இயக்குநர் பனீந்திர சுப்ரமண்யா ஆகிய இருவரும் இன்று மாலை படுகொலை செய்யப்பட்டனர்.
ஓராண்டுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெலிக்ஸ் என்ற ஊழியர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பணியில் இருந்து நீக்கப்பட்ட பெலிக்ஸ் ‘ஏரோனிக்ஸ் இன்டர்நெட் கம்பெனி’க்கு போட்டியாக நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்திவந்தாக தெரிகிறது.
தொழில் போட்டி காரணமாகவும் தன்னை ஏற்கனவே பணியில் இருந்து நீக்கியதன் காரணமாகவும் காழ்புணர்ச்சியில் இருந்த பெலிக்ஸ் பெங்களூரின் அம்ருதஹள்ளி பகுதியில் உள்ள ‘ஏரோனிக்ஸ்’ நிறுவனத்தின் அலுவலகத்துக்குள் இன்று மாலை 4 மணிக்கு அத்துமீறி நுழைந்த பெலிக்ஸ் தான் ஏற்கனவே எடுத்துவந்த வாளுடன் வினு குமார் மற்றும் பனீந்திர சுப்ரமண்யா இருவர் மீதும் பாய்ந்து சரமாரியாக வெட்டினார்.
ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். இரட்டைக் கொலையை அடுத்து தலைமறைவான பெலிக்ஸை போலீசார் தேடி வருவதாக பெங்களூரு வடக்கு கிழக்கு இணை ஆணையர் லக்ஷ்மி பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஐ.டி. தலைநகரமான பெங்களூரில் ஐ.டி. நிறுவன சி.இ.ஓ. மற்றும் எம்.டி. இருவரும் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பது பெங்களூரை அதிர வைத்திருக்கிறது.