சென்னை: இலாகா இல்லாத  அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு தொடர்புடைய 10 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 2 முறை பல இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று 3வது முறையாக மீண்டும் மத்திய காவல்துறையினர் உதவியுடன்  சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி மீது ஏராளமான ஊழல் புகார்கள் உள்ள நிலையில், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை என பல்வேறு துறையினர், அவருக்கு சொந்த இடங்கள் மற்றும் அவரது தம்பி மற்றும் உறவினர் வீடுகள், அலுவலகங்களில் சோதனைகள் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மே மாதம் 27ந்தேதி செந்தில் பாலாஜியின் தம்பி, ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகம் உட்பட 40 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தினர்.

அப்போது, செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள், வருமான வரித்துறையினர்மீது தாக்குதல் நடத்தியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சோதனை ஒருவாரம் நீடித்தது. அப்போது,  பல ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி அந்த வீடுகளுக்கு சீல் வைத்தனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது சம்பந்தமாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மேலும்,  செந்தில்பாலாஜியின் தம்பி மற்றும் டாஸ்மாக், மின்துறை ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர்  சோதனை நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து 2வது முறை மத்திய காவல்துறை உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. ஜூன் 13ந்தேதி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடையவர்கள் என மொத்தம் 10க்கும் மேற்பட்டவர்களின் வீட்டில்  வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, கடந்த ஜுன் மாதம்  26-ந்தேதி அமலாக்கத்துறையினர் செந்தில்பாலாஜியின் பசுமை வழிச்சாலை வீடு உள்பட பல இடங்களில் சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்ட நிலையில், நெஞ்சுவலி என கூறி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை என்ற பெயரில் ஓய்வெடுத்து வருகிறார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில்,  இன்று 3வது முறையாக வருமான வரித்துறை கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பியின் வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கொங்கு மெஸ் மணி என்பவரது வீட்டில் 3 வது கட்டமாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.