சென்னை: தமிழ்நாட்டில் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நேற்று கடலூர், செங்கல்பட்டு பகுதியில் கொலை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், மாநிலத்தின் தலைநகரமாலன சென்னையின் பிரபலமான பகுதியில் ரவுடி ஒருவர் கும்பலால் ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் அவ்வப்போது கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த மே மாதம் மட்டும் நாட்களில் 20 கொலை சம்பவங்கள், அதுவும் முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டனர். இது பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.. இதில் பெரும்பாலான கொலைகள் மது மற்றும் குடும்ப பிரச்சினைகளால் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த தொடர் கொலைகள் மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், கடந்த இரு நாட்களில் மட்டும் செங்கல்பட்டு, கடலூர், சென்னை என அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
இந்த நிலையில் சென்னை மயிலாப்பூர் பகுதியில், ரவுடி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் பகுதியைச் சேர்ந்த டொக்கன் ராஜா (வயது 40) என்ற ரவுடி, ஏற்கனவே நடைபெற்ற கொலைக்கு பழிக்குப்பழியாக சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ரவுடி டோக்கன் ராஜா, பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சிடி மணியின் கூட்டாளி என்று கூறப்படுகிறது. இவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட 25 வழக்குகள் உள்ளன. தற்போது ஜாமினில் இருந்து வந்த டோக்கன் ராஜா, தொடர்ந்து மயிலை பல்லகக்கு மாநகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், நேற்று (ஜூலை 9) இரவு அவர் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, அந்த பகுதியில் மறைந்து இருந்த 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெட்டியது. இதனால் டோக்கன் ராஜா பயந்து ஓட, அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு இரு சக்கர வாகனங்களில் தப்பிச்சென்றது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவல் அறிந்த மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையில் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், டோக்கன் ராஜா பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததுளது.
டோக்கன் ராஜா , கடந்த 2003ஆம் ஆண்டு கதிரவன் என்பவரை கொலை செய்த வழக்கில், அந்த கொலைக்குப் பழிக்குப் பழியாக கதிரவன் என்பவரது மகன்கள் ஆட்களை வைத்து கொலை செய்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கதிரவனை டொக்கன் ராஜா கோஷ்டியினர் கொலை செய்த போது அவருக்கு ஒன்றரை வயதில் நரேஷ் குமார் என்ற மகனும், இரண்டாவது முறையாக மனைவி கர்ப்பமாகவும் இருந்துள்ளார்.
கதிரவனின் இறுதி சடங்குகள் முடிந்த பின் குடும்பத்துடன் துரைப்பாக்கத்தில் குடியேறிய கதிவன் குடும்பத்தினர், தற்போது தங்களது வன்மத்தை அரங்கேற்றி உள்ளனர்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பி ஓடிய கொலை குற்றவாளிகளை நான்கு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னையில் ரவுடிகளுக்கு இடமில்லை என சென்னை மாநகர புதிய காவல்ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் கூறிய நிலையில் அடுத்த நாளே மயிலையில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.