சென்னை: அரசியல்வாதியைப் போல ஆளுநர் அறிக்கை விடுவது சரியல்ல என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழங்களில் துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்டாமல் உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, அதுகுறித்து விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், பல்கலைக்கழக துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கவேண்டும் என்றும், துணைவேந்தர்கள் இல்லாமல் சில பல்கலைக்கழகங்களில் பணிகள் நடைபெறுவது தாமதமாகி வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். மேலும், சிண்டிகேட், செனட் உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாக அமைப்பு சார்ந்த கூட்டங்கள் பல்கலைக் கழகங்களில் நடைபெறவேண்டும் எனவும் , பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும், பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு நடத்தப்படும் தேர்வுமுறை யுஜிசி விதிமுறைக்கு உட்பட்டு நடக்கவேண்டும் என்றும் அறிக்கையில் விமர்சனம் செய்திருந்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறார் என்றும், அரசியல்வாதிகளைப் போல ஆளுநர் அறிக்கை வெளியிடுவது சரியல்ல என்றவர், இந்த விஷயங்களில் முதலமைச்சர் ஸ்டாலின், சட்ட வல்லுநர்களை ஆலோசித்தே முடிவெடுக்கிறார் அதே நேரத்தில் ஆளுநர் சட்ட வல்லுநர்களை ஆலோசிப்ப தில்லை என்று குற்றம் சாட்டினார்.
பல்கலை. சிண்டிகேட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடப்பதாக குற்றம் சாட்டும் ஆளுநர், அதே கூட்டத்தை ராஜ்பவனில் ஏன் நடத்தி னார். தவறுகளை முறையாக சுட்டிக் காட்ட வேண்டும். ஆனால் அவருக்கு வேண்டப்பட்டவர்களை கொண்டு வருவதற்காக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கக் கூடாது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்விப்பியதுடன், செயலாளரை கூட சந்திக்க முடியவில்லை என ஆளுநர் தெரிவிக்கிறார் ஆனால், நான் இல்லாமலேயே பல கூட்டங்களை அவர் நடத்தி இருக்கிறார் என்றவர், தாம்தான் எல்லாம் என்று ஆளுநர் செயல்படுகிறார். அரசியல்வாதிகளைப் போல ஆளுநர் அறிக்கை வெளியிடுகிறார். தமிழ்நாட்டில் இது செல்லுபடியாகாது என்றும் கூடினார்.