பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10 சதவிகிதம் இடஒதுக்கீட்டால் இந்தியாவில் சமூக நீதி சீரழிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.

1871 ம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரையிலான தரவுகளை ஆய்வு செய்த பிரெஞ்சு பொருளாதார நிபுணரும் பல்கலைக்கழக பேராசிரியருமான தாமஸ் பிக்கெட்டி இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள இந்துக்களின் மக்கள்தொகையில் உயர்சாதியினரின் எண்ணிக்கை 13 முதல் 14 சதவீதமாக உள்ளது. மற்ற அனைத்து மதங்களை கருத்தில் கொண்டால் உயர்சாதியினரின் எண்ணிக்கை 10 சதவீதமாக உள்ளது.

அதில் 60 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ. 66000 க்கும் குறைவாக சம்பாதிப்பதாக வைத்துக் கொண்டால் கூட இவர்கள் மொத்த இந்து மக்கள் தொகையில் சுமார் 6% மட்டுமே உள்ளனர்.

ஆனால் 6 சதவீதம் மட்டுமே உள்ள இந்த EWS பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படுவதும், மக்கள் தொகையில் 50% உள்ள OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடும் மற்றும் 30% உள்ள SC/ST பிரிவினருக்கு 22.5% இடஒதுக்கீடு வழங்குவதும் சமூக நீதியை அழிக்கும் செயலாகவே உள்ளது என்று தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.