வீட்டு வாடகை அதிகமாக இருந்ததால் சுமார் ஒருவருடமாக தினமும் விமானத்தில் 1200 கி.மீ. பறந்து சென்று படித்த மாணவன் குறித்த தகவல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் பில் என்ற அந்த மாணவன் சான்பிரான்ஸிஸ்கோ நகருக்கு அருகில் கேல் பெர்க்லி-யில் உள்ள பல்கலை கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டார்.
அதுவரை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் பணிபுரிந்த நிறுவனம் வழங்கி வந்த கட்டணமில்லா தங்கும் இடத்தில் தங்கி வந்த பில், கேல் பெர்க்லி மற்றும் அதன் அருகில் உள்ள பே ஏரியா ஆகிய இடங்களில் வீட்டு வாடகை குறித்து விசாரித்துள்ளார்.
அமெரிக்காவிலேயே அதிக வாடகை உள்ள நகரங்களில் ஒன்றான இந்த பகுதியில் நாளொன்றுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 30000 முதல் ரூ. 40000 வரை சம்பாதித்தால் மட்டுமே வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க முடியும் என்பதை உணர்ந்த அவர் திடுக்கிட்டுப் போனார்.
10 மாதங்களில் தனது பயிற்சி முடிந்ததும் ஏற்கனவே வேலை பார்த்து வந்த இடத்தில் மீண்டும் வேலை கிடைத்து விடும் என்பதால் இந்த குறுகிய காலத்திற்கு ஒரு பெரும் தொகையை வீட்டு வாடகையாக கொடுப்பதற்கு தயங்கிய பில் மாற்று வழி குறித்து யோசித்தார்.
பின்னர், வாரம் மூன்று நாட்கள், அதாவது திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே தனக்கு வகுப்பு இருப்பதால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்தே தினமும் வந்துபோக முடிவு செய்தார்.
லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கும் சான்பிரான்ஸிஸ்கோ-வுக்கும் இடையே 383 மைல் (616 கி.மீ.) இருந்தபோதும் தினமும் அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து 6 மணி விமானத்தை பிடித்து சான்பிரான்ஸிஸ்கோ-வில் இறங்கி அங்கிருந்து 8:30 மணிக்கு மெட்ரோ மூலம் கேல் பெர்க்லி சென்று தனது 10 மணி வகுப்புக்கு ஆஜரானார்.
அதுபோல் மாலையில் மீண்டும் விமானம் பிடித்து லாஸ் ஏஞ்செல்ஸ் திரும்பினார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பில் ஆரம்பத்தில் இது சிரமமாக இருந்தது என்றாலும் பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இது சாத்தியமானது.
வாரத்தில் மூன்று நாள் வகுப்பு என்பது இதனை சாத்தியமாக்கியது இருந்தபோதும் இரண்டு வாரங்கள் தொடர்ந்து ஐந்து நாட்களும் வகுப்புகள் இருந்தது அந்த ஐந்து நாட்களும் பயணம் செய்ய நேர்ந்தது எனக்கு மிகவும் சலிப்பை ஏற்படுத்தியதோடு என்னால் எனது படிப்பை முடிக்க முடியுமா என்று கேள்விக்குறி எழுந்தது.
இருந்தபோதும், மொத்தம் 75,955 மணி நேரம் 92,089 மைல் பயணம் செய்து தனது படிப்பை முடித்ததாகவும் இந்த பயணத்திற்காக கேஷ் பேக் மற்றும் க்ரெடிட் பாயிண்டுகள் போக $5,592.66 (ரூ. 4.6 லட்சம்) செலவழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உயர்படிப்பிற்காக லட்சிய பயணத்தை மேற்கொண்ட பில் இதுகுறித்து தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கும் பேட்டி அளித்துள்ளார். இவரின் இந்த சாதனையையும் மனஉறுதியையும் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.