கோவை: கோவை தனியார் கல்லூரியில் 10 அடி உயர சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வந்தது. இதில் 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இப்பணிகளில் பெரும்மானாவர்கள் வெளி மாநில தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த கட்டுமானப்பணி நேற்று நடைபெற்றுகொண்டிருந்தபோது, கோவை மாவட்டத்தில் பெய்து வந்த மிதமான மழையால், சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததது. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் மீட்கும்பணியில் மற்றவர்களும் காவல்துறையினரும் ஈடுபட்டனர். ஆனால் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனிடன்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களில் 3 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து விபத்து நடைபெற்ற இடத்தை மாவட்ட ஆட்சியர் நேற்று இரவு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதுபோல கோவை மாநகராட்சி துணை மேயர் உள்பட அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டனர்.
இதுகுறித்து பேட்டியளித்த கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், ”இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளது. கல்லூரியை சுற்றியுள்ள அனைத்து சுவர்களுமே இந்த நிலைமையில் தான் உள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பே கனமழை பெய்யும் பொழுது நானும், செயலாளரும் இங்கு வந்து பார்த்தோம். அப்பொழுதே மழை நீர் முழங்கால் அளவிற்கு இருந்தது. ஏற்கனவே இருமுறை எச்சரித்தும் கல்லூரி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளவில்லை. கல்லூரி நிர்வாகம் இந்த நிலைமையில் தான் உள்ளது.
சுவர் இடிந்து விழுந்ததற்கு மாநகராட்சி பொறுப்பேற்க முடியாது. இருந்தாலும், பலமுறை மாநகராட்சி தரப்பில் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் கல்லூரி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. கல்லூரி நிர்வாகத்தின் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சுற்றுச்சுவர் கம்பி எதுவுமில்லாமல் வெறும் கற்களை மட்டுமே வைத்து கட்டியுள்ளார்கள். பழனியப்பா நகரில் உள்ள ஓடையை ஆக்கிரமிப்பு செய்து காம்பவுண்ட் கட்டி உள்ளார்கள்” என்றார்.