டில்லி
பொருளாதார சிக்கலால் கடும் உணவுப்பஞ்சத்தால் சிக்கி உள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 10000 டன் கோதுமை வழங்கி உதவி உள்ளது.
பொருளாதார சிக்கலால் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எனவே ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உதவும் விதமாக, இந்தியா சமீபத்தில் 10,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்கியிருக்கிறது. இதைத் தனது டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ள ஐ.நா. உணவு அமைப்பு, இந்த கோதுமை இன்று அந்நாட்டின் ஹெராத் நகரை அடைந்ததாகத் தெரிவித்திருக்கிறது.
ஏற்கனவே கடந்த மாதம், ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக, மனிதாபிமான அடிப்படையில், இந்திய அரசாங்கம் 20,000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர், அந்நாட்டிற்குப் பாகிஸ்தானின் நில எல்லை வழியாக இந்தியாவிலிருந்து 40,000 டன் கோதுமை வழங்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் உலக உணவுத் திட்ட மதிப்பீட்டின்படி, தீவிரமான உணவுப் பாதுகாப்பின்மை உள்ள நாடுகளில் ஒன்றாகும். சுமார் 90 லட்சம் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியாலும், பசியாலும் வாடுகின்றனர். கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து, நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து, தினந்தோறும் பயங்கரவாதம் மற்றும் குண்டுவெடிப்பு வழக்குகள் அதிகரித்து வருகின்றன.
ஆப்கனில் பெண்கள் பள்ளிகளுக்குச் செல்வதை தடை செய்திருக்கும் தாலிபான், கடந்த டிசம்பரில், பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்கும், தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதித்தது. அதே வேளையில் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்து வருவதால், பிற நாடுகளின் உதவியை அந்நாடு நாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.