சென்னை:
மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் காரைப் பரிசளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, பகத் பாசில், உதயநிதி நடிப்பில் கடந்த 29ம் தேதி `மாமன்னன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அரசியலில் இருக்கும் சாதிய அரசியலைப் பற்றிப் பேசும் இப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதுபற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி, “ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களைக் கதையுடனும் களத்துடனும் தொடர்புப்படுத்தி கருத்துகளைப் பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி.
இதற்காக ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் மாரி செல்வராஜ் சாருக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி” என்று பதிவிட்டு மாரி செல்வராஜைப் பாராட்டியுள்ளார்.
[youtube-feed feed=1]