சென்னை
கணவர் வாங்கும் சொத்துக்களில் இல்லத்தரசியான மனைவிக்குச் சம பங்கு உண்டு எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னையை சேர்ந்த கம்சாலா அம்மாள் என்பவரின் கணவர் சவூதி அரேபியாவில் பணி புரிந்துள்ளார். அப்போது அவர் சம்பாதித்த பணத்தில் இரு சொத்துக்களை வாங்கி உள்ளார். கம்சாலா அம்மாள் பெயரில் வாங்கிய நிலம் மற்றும் அவருடைய வங்கி பெட்டகத்தில் வைக்கப்ப்ப்ப்பட்டிருந்த நகைகள் குறித்து அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 2019 ஆம் வருடம் இந்த வழக்கில் உள்ளூர் நீதிமன்றம் இந்த சொத்துக்களில் தனக்குச் சம பங்கு வேண்டும் என்னும் கம்சாலா அம்மாளின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதையொட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் இடையில் கம்சாலா அம்மாளின் கணவர் மரணம் அடைந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வழங்கி உள்ளார். தீர்ப்பில்
”ஒரு இல்லத்தரசி வீட்டை நிர்வகிப்பாள், கணவன் வெளியேறவும் சம்பாதிக்கவும் தனது சொந்த கனவுகளைத் தியாகம் செய்கிறாள், மேலும் குடும்பச் சொத்துக்களைப் பெறுவதற்குச் சமமாக பங்களிக்கிறாள், எனவே, கணவன் தனது சொந்த பெயரில் சம்பாதித்த அனைத்து சொத்துக்களிலும் பாதி பங்குக்கு உரிமையுடையவள்.
கணவர் தனது சொந்த சேமிப்பில் வாங்கியிருந்தாலும், கம்சாலா அம்மாள் 50 சதவீத பங்குக்குத் தகுதியானவர் இரண்டு வங்கி பெட்டகங்களின் உள்ளடக்கங்களும் இறந்தவர் கம்சாலா அம்மாளுக்குப் பரிசாக வாங்கப்பட்டது, எனவே அவை அவருக்கு மட்டுமே சொந்தமானவை”
என்று கூறப்பட்டுள்ளது.