மணிப்பூர்:
பிரதமர் மோடியின் மனிதன் 102வது ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியைப் புறக்கணித்த மணிப்பூர் மக்கள், ரேடியோ பெட்டிகளை உடைத்தும் தீயிட்டு எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதத் தொடக்கத்தில் மூண்ட கலவரத்தைத் தொடர்ந்து தற்போது வரை பதற்றமாகக் சூழல் காணப்படுகிறது. இந்நிலையில், மணிப்பூரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என அதிருப்தி அடைந்துள்ள மக்கள் பிரதமர் மோடிக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி இன்று தனது 102வது மன் கீ பாத் வானொலி உரையைத் தொடங்கிய உடன் மணிப்பூரின் சாமுரூ கெய்தெலில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வானொலி பெட்டிகளை உடைத்தும் எரித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து அனைத்து சாமுரோ யுனைடெட் கிளப்ஸ் அமைப்பு (ASUCO) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலத்தில் வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படவில்லை என்றும், பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சிக்கு எதிராக ரேடியோக்கள் எரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரேடியோக்களை எரித்த பொதுமக்கள், “மான் கி பாத் சோரோ, கம் கி பாத் கரோ” (“மன் கி பாத் தீர்வு அல்ல, அமைதிக் கொண்டு வாருங்கள்” என்று முழக்கங்களை எழுப்பினர்.

மணிப்பூரில் மத்திய பாதுகாப்புப் படைகள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவா வந்திருக்கிறார்கள்? என்று கேட்டிருக்கும் ASUCO அமைப்பு, வன்முறையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் மணிப்பூரில் இருந்து மத்திய பாதுகாப்புப் படைகளை திரும்பப் பெற்றுக்கொள்ளலாமே என்றும் வலியுறுத்தியுள்ளது.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற மத்திய தலைவர்களுக்கு பதவியேற்பு விழாக்களில் கலந்துகொள்வதுதான் மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகிறது என்றும் அந்த அமைப்ப சாடியிருக்கிறது.

10 சின்-குகி எம்எல்ஏக்கள் மணிப்பூரின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு வெளிப்படையாக அச்சுறுத்தல் விடுத்தபோது, மாநிலத்தின் 49 எம்எல்ஏக்கள் (கெய்ராவ் ஏசி எம்எல்ஏ தவிர) மற்றும் 3 எம்பிக்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்றும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து தங்கள் நிலைப்பாட்டை விரைவில் தெரிவிக்குமாறும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது.

அந்த 10 எம்.எல்.ஏ.க்கள் மீது பாஜக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேட்டிருக்கும் அந்த அமைப்பு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் மற்றும் மணிப்பூர் சட்டமன்ற சபாநாயகர் ஆகியோரிடம் கோரியுள்ளது.