துரை

பொய்ச் செய்தி பரப்பியதாகச் சென்னையில் கைதான பாஜக மாநில செயலர் எஸ் ஜி சூர்யா 15  நாள் நீதிமன்றக் காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எஸ் ஜி சூர்யா தமிழக பாஜக மாநிலச் செயலாளராக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு இவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் மலக்குழி மரணம் நிகழ்ந்தது. கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் நிகழ்ந்தது. சு. வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்’ எனப் பதிவிட்டிருந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், “இது பொய்யான தகவல். எனவே சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மதுரை மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சூர்யா மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை சென்னையில் நேற்றிரவு கைது செய்தனர். இந்த கைதுக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை சென்னையிலிருந்து சூர்யாவை மதுரைக்கு அழைத்து வந்த காவல்துறையினர் அவரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம் சங்கரன் முன்பு முன்னிறுத்தினர். இன்று நீதிமன்றம் விடுமுறை என்பதால் நீதிபதி வீட்டில் சூர்யாவை காவல்துறையினர் முன்னிறுத்தினர். நீதிபதி அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  பிறகு சூர்யா மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.