திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த படவேடு அம்மன் கோயில் அருகே உள்ள கடையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக ராணுவ வீரர் பிரபாகரனின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கடை கட்டி வாடகைக்கு விட்ட அதன் உரிமையாளர் ராமுவுக்கும் கடையை வாடகைக்கு எடுத்து நடத்திவரும் நபருக்கும் இடையே கடந்த வாரம் தகராறு ஏற்பட்டது.
இதில் வாடகைதாரர் தரப்பைச்சேர்ந்த கீர்த்தி என்ற பெண் தாக்கப்பட்டதுடன் மானபங்கப்படுத்தப்பட்டதாகவும் ஜம்மு காஷ்மீரில் இருந்து கீர்த்தியின் கணவரும் ராணுவ வீரருமான பிரபாகரன் வீடியோ வெளியிட்டதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி-க்கு கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் ராணுவ வீரர் பிரபாகரனும் அவரது உறவினர் வினோத் என்பவரும் பேசிக்கொண்ட ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நியூஸ்18 தொலைக்காட்சி வெளிட்ட அந்த ஆடியோவில் கீர்த்தி தாக்கப்பட்டதாகவும் மானபங்கப்படுத்தப்பட்டதாகவும் மிகைப்படுத்திக் கூறும்படி வினோத்திடம் ராணுவ வீரர் பிரபாகரன் பேசியிருந்தார்.
இந்த நிலையில் ஆடியோ தொடர்பாக ராணுவ வீரருடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்ததாக ராணுவவீரர் பிரபாகரனின் உறவினர் வினோத் கைது செய்யப்பட்டுள்ளார்.