பெங்களூரு
கர்நாடகாவில் இலவச அரிசி திட்டத்தைத் தடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க மத்திய பாஜக அரசு திட்டம் தீட்டி உள்ளதாக சித்தராமையா கூறி உள்ளார்.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா நேற்று செய்தியாளர்களிடம், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு 5 இலவசத் திட்டங்களை அளிப்போம் என வாக்குறுதி அளித்திருந்தோம். முதலில் பெண்கள் இலவச பேருந்து பயணத் திட்டம் தொடங்கி உள்ளது. அடுத்து அனனபாக்யா திட்டத்தின் கீழ் 10 கிலோ இலவச அரசி வழங்க அரசு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது.
இந்த அன்னபாக்யா திட்டத்திற்காக மாதந்தோறும் ரூ.840 கோடி மற்றும் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்து 92 கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. மாநில அரசு சார்பில் தற்போது இலவசமாக 5 கிலோ அரிசி வழங்குவதில் எந்த தட்டுப்பாடும் இல்லை. கூடுதலாகத் தேவைப்படும் 5 கிலோ அரிசியை மத்திய அரசிடம் இருந்து வாங்க கர்நாடக அரசு முடிவு செய்திருந்தது.
மத்திய பாஜக அரசு கர்நாடகத்தின் இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் அரசியல் செய்யத் தொடங்கி உள்ளது.மத்திய அரசு முதலில் கர்நாடகத்திற்கு 2 லட்சத்து 8 ஆயிரத்து 425 மெட்ரிக் டன் அரிசி தருவதற்கு ஒப்புக் கொண்டு தற்போது திடீரென்று, அரிசி வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளது. வெளிச்சந்தையில் அரிசி விற்பனைக்கு இல்லை என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வந்து, கர்நாடகத்திற்கு அரிசி தர மறுக்கிறது.
கர்நாடகாவின் அன்னபாக்யா இலவச அரிசி திட்டத்தின் கீழ் அரிசி அளிக்க மறுத்து காங்கிரஸ் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த பாஜக முயல்கிறது. பாஜக இந்த திட்டத்தை அமல்படுத்துவதைத் தடுக்க சதி செய்கிறது. பாஜகவினர் எந்த முயற்சி எடுத்தாலும், அதனை நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டு எப்படியாவது இந்த திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்.” என்று தெரிவித்துள்ளார்.