சென்னை
அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்ததை அடுத்து முதல்வர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் வீட்டில் 17 மணி நேரம் சோதனை நடத்தி உள்ளனர். பிறகு அவர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு அமைச்சரை அழைத்துச் சென்ற போது அவருக்கு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சோதனையின்போது, தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் இருந்து 3 பைகளில் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் அவசர ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகளால் அமைச்சர் கைதுசெய்யப்பட்டுள்ளதைச் சட்ட ரீதியில் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.